சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிர்வாகத்துக்கு எதிராக சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 23 சிஐடியு தொழிலாளர்கள் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார் தலைமையில் சுங்குவார்சத்திரம் பஜாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, சாம்சங் நிர்வாகம் உருவாக்கியுள்ள இன்டர்னல் யூனியனில் தொழிலாளர்களை இணைய வற்புறுத்துவதை கைவிடவேண்டும். ஊழியர்களுக்கு எதிராக உள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட நிர்ப்பந்திக்கும் போக்கை கைவிடவேண்டும்.

பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும். நிர்வாகம் அறிவித்த உற்பத்தி ஊக்க தொகையை சிஐடியு தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும். சிஐடியு தொழிலாளர்கள் 23 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

The post சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிர்வாகத்துக்கு எதிராக சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: