மதுரை : மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் உள்ள இடத்தில் சிலர் போலியான ஓவியங்களை வரைந்தது குறித்து தொல்லியல் துறையினர் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மட்டும் 15க்கும் அதிகமான இடங்களில் வெள்ளை நிற பழங்கால ஓவியங்கள் உள்ளன. இதேபோல் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்களை தொல்லியலாளர்கள் கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.
இந்நிலையில், இதே இடத்தில் வெள்ளை நிறத்தில் ஓவியங்களை யாரோ வரைந்து சென்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் பழமை ஓவியங்களை பாதுகாக்கும் வகையில், போலி ஓவியங்களை அழிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை சிற்பம் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் தேவி கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தின் புத்தூர் மலையில் இருக்கும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்களை பாதுகாத்திட வேண்டும். அத்துடன், புதிதாக யாரோ வெள்ளை நிறத்து பாறை ஓவியங்களை வரைந்து சென்றுள்ளனர்.
எண்ணெய் வண்ணத்தில் கோடுகள் வரைந்து, பழைய ஓவிய வடிவிலேயே பாறையில் வரைந்திருப்பதும், தற்காலத்து தமிழ் எழுத்துகளை பதிவிட்டிருப்பதும் வேதனையளிக்கிறது.
தொன்மை பெருமைக்குரிய கீழவளவு மலையில் இருந்த பாறை ஓவியங்கள் குவாரியால் சேதமுற்று அழிந்து போனது. அதே வரிசையில் இந்த போலி ஓவியங்களால் புத்தூர் மலை பழமை ஓவியத்திற்கும் பாதிப்பு ஏற்படும். பிற்காலத்தில் பழமை வரலாற்று எழுதுவோரும், இந்த போலி ஓவியங்களால் பெரும் குழப்பத்திற்கு ஆளாவர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
மதுரை தொல்லியல் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தொல்லியல் தளங்கள் மற்றும் புராதன நினைவுச் சின்னங்களை சேதப்படுத்துவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்திய புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958ன்படி இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஒரு வரலாற்றுச் சின்னத்தை சிதைப்பதை ஒரு கொலைக்குற்றமாகவே பார்க்க வேண்டும். மதுரை புத்தூர் மலையில் ஆய்வு நடத்தி, தவறான ஓவியங்களை நீக்குவதுடன், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். போலி ஓவியங்கள் வரைந்தவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post புத்தூர் மலையில் உள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமை பாறை ஓவியங்களுக்குள் போலி ஓவியம் புகுந்தது எப்படி? appeared first on Dinakaran.