கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்டு மகளிர் குழு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஏப். 22: தண்டராம்பட்டு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு மகளிர் சுயஉதவி குழுவினர் நேற்று பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் ராதாபுரம், சிறுபாக்கம், வணக்கம்பாடி, கூடலூர், சிறுபாக்கம் புதூர் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் உறுப்பினராக சேர்ந்து பயிர்க்கடன் பெற்றுள்ளனர். அதேபோல், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் இந்த சங்கத்தில் கடன் உதவி பெற்றுள்ளனர்.

அதன்படி, ராதாபுரம் ஊராட்சியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஒரு குழுவுக்கு ரூ.10 லட்சம் வீதம் 5 குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மகளிர் குழுவிற்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். அப்போது, வங்கி செயலாளராக இருந்த சேகர் என்பவர் ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வங்கியில் இருக்க வேண்டும் எனக்கூறி அந்த பணத்தை நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பணத்தை வங்கி செயலாளர் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், அந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தாங்கிய வாங்கிய கடன் தொகையை கட்டி உள்ளனர். தொடர்ந்து, மீதமுள்ள ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தையும் கட்டுங்கள். அவ்வாறு கட்டினால் தான் உங்களுக்கு மீண்டும் மகளிர் குழு கடன் தரப்படும் தற்போதைய வங்கி செயலாளர் கூறிவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த ராதாபுரத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் நேற்று காலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணைப் பதிவாளர் ராஜசேகர், கூட்டுறவு சார்பதிவாளர் மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, துணைப் பதிவாளர், `நீங்கள் அளித்த புகார் மனு மீது, அலுவலரை நியமித்து விசாரணை செய்து வருகிறோம். இன்னும் 40 நாட்களுக்குள் விசாரணை முடிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்னையில் ஏற்கனவே வங்கி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே, விசாரணை முடியும் வரை உங்களுடைய மகளிர் குழுவுக்கு மேற்கொண்டு கடன் வழங்க இயலாது என்றார்.

The post கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்டு மகளிர் குழு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தண்டராம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: