தமிழகத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என சொல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி; சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்

சென்னை: ‘தமிழகத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் நாங்கள் பாஜக கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம்’ என்று சொல்வதற்கு அதிமுகவுக்கு தகுதி இருக்கிறதா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு சவால் விடுத்தார். சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி (அதிமுக) பேசியதாவது: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சென்னை, கிண்டியில் அரசு மருத்துவமனையில் தனது தாய்க்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால் அவரது மகன் ஒரு டாக்டரை கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது. அதிக அளவில் டாக்டர்கள், செவிலியர்கள் இருந்து இருந்தால் அது நடந்து இருக்காது. தென்காசியில் ஒரு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி, நோயாளிக்கு கட்டு போட்டதாக செய்தி வந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: அது பொய்யான குற்றச்சாட்டு. அந்த மருத்துவமனையில் நோயாளியை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்ததை, வீடியோவாக எடுத்து தவறாக சமூகவளைதளத்தில் போட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 3,56,843 நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.318 கோடி செலவு செய்துள்ளது.
கோவிந்தசாமி: ஊட்டியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் அரசு மருத்துவ கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார். ஒரு படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. அதாவது, மருத்துவ கல்லூரிக்கு அனுமதி, அடிக்கல், நிதி ஒதுக்கியது என எல்லாமே அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: 2011ம் ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு 15, 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்தது. மீதமுள்ள பணிகளை கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றி முடித்துள்ளோம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் எத்தனை மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளித்துள்ளீர்கள்?

அமைச்சர் எ.வ.வேலு: ஊட்டியில் ஒரு மலையில் கல்லூரி, இன்னொரு மலையில் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெற்றது. சரிவான பகுதியில் கட்டிடம் கட்டுவது எளிதான காரியம் இல்லை. பலமுறை ஆய்வு செய்து நீங்கள் விட்டுச்சென்ற 80 சதவீத பணிகளை திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டு, அதை முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் தற்போது 36 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கூடுதலாக மருத்துவ கல்லூரி கொடுக்க ஒன்றிய அரசு தயக்கம் காட்டுகிறது. ஆனாலும், முதல்வர் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதிதாக தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 6 மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்க பிரதமரிடம் கோரிக்கை வை்கப்பட்டுள்ளது. நிச்சயமாக தருவதாக சொல்லி உள்ளார். தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை உலகமே பார்த்து வியந்து வருகிறது. குஜராத், மேகாலயா, மராட்டிய மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து பாராட்டி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்தான் உயர் தர சிகிச்சை அளிக்க முடியும். அறுவை சிகிச்சையும் செய்ய முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக உறுப்பு மாற்று சிகிச்சைக்கான தேசிய விருது பெற்றுள்ளோம்.
அமைச்சர் சிவசங்கர்: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் நீங்கள் (அதிமுக) செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவ கல்லூரியை ஒன்றிய அரசு அளித்தது. ஒரு படத்தில் வடிவேலு காமெடி போல, கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல. நீட் தேர்வை நீங்க நடத்திக்கோங்க. அதற்கு பதிலாக 11 மருத்துவ கல்லூரி தந்திடுங்க என்று டீலிங் போட்டிருக்காங்க.
எடப்பாடி பழனிசாமி: நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின்போதுதான். அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தது அதிமுக. நீட் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழகத்தில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவரின் மனைவிதான் வாதாடினார். நீட் தேர்வு வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவர்தான்.

அமைச்சர் சிவசங்கர்: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது அதிமுக ஆட்சியில்தான். கலைஞர், ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. எடப்பாடி முதல்வராக இருந்தபோதுதான் தமிழகத்தில் நீட் வந்தது.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதும், திமுக ஆட்சியில் இருக்கும்போதும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. யார் இருக்கும்போது நீட் தமிழகத்திற்குள் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்கட்சி தலைவர், நீட் தேர்வு முறையை யார் கொண்டு வந்தது? யார் கொண்டு வந்தது? கொண்டு வந்த காரணத்தினால் தான் இவ்வளவு சிக்கல் என்று சொல்லியிருக்கிறார். அந்த சிக்கலை சரிசெய்வதற்கு ஒரு சரியான வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ – நான் அந்த விவாதத்திற்கும் வரவில்லை. “இப்போது இருக்கக்கூடிய நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம்” என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறதா? இதுதான் என் கேள்வி.எடப்பாடி: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் நாங்கள் எப்படி தலையிட முடியும்?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஒன்றிய அரசு அதை கொண்டு வருவதற்கு எல்லாவித அதிகாரமும் இருக்கிறது. அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசிற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், அது தேவையில்லை என்று வலியுறுத்துவதற்கு நீங்கள் தயாரா? அதுதான் என்னுடைய கேள்வி.
எடப்பாடி: உச்சநீதிமனறத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம்தான் சரி செய்ய வேண்டும்.
சிவசங்கர்: உச்ச நீதிமன்றம்தான் சரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் தமிழகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினீர்கள்?
எடப்பாடி: 2019ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள்?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கு நாங்கள் எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் ஒன்றியத்தில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இந்த நிபந்தனையை போட்டு, அந்த கூட்டணியை தொடர்வீர்களா? என்பதுதான் என் கேள்வி.
எடப்பாடி: 1999ம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அதனால் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தப்பில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு “பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். 2026 மட்டுமல்ல 2031-லும் அந்த கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று நீங்கள் கூறிவிட்டு, இப்போது கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே; யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

* நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் ஒன்றியத்தில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இந்த நிபந்தனையை போட்டு, அந்த கூட்டணியை தொடர்வீர்களா என்பதுதான் என் கேள்வி.- முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post தமிழகத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என சொல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி; சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: