கல்யாணம், மஞ்சள் நீராட்டு என தொடர்ந்து அழைப்பு ‘1 மணி நேரம் கூட எனக்கு தனிமையில்லை’: தொண்டர்களின் வற்புறுத்தலால் திருமாவளவன் வேதனை

சென்னை: ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லாத நிலையில் இருக்கிறேன் என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களிடம் முகநூல் மூலமாக திருமாவளவன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஒருநாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட எனக்கு தனிமை இல்லாத நிலையில் இருக்கிறேன். மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள்.

24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை. ஆனால் கட்சி பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்துகளை முன் வைப்பதால் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள். எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, கூடுதலாக பணம் கிடைக்கும் இடத்தில் உறவு வைத்துக் கொள்வது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூட்டணியை தீர்மானிப்பது போன்ற விஷயங்கள் ஒன்றும் ராஜ தந்திரம் இல்லை.

அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல். எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இன்றி ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இதனை புரிந்து கொள்ள முடியாதவர்கள் வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் நமக்கு எதிராக தகவல்களை தொடர்ந்து பரப்புகின்றனர். எனவே யார் என்ன சொன்னாலும், அதற்கு எதிர்வினை கருத்தை சொல்லி அதில் நாம் சிக்கிக்கொள்ள கூடாது.

அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம். ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

The post கல்யாணம், மஞ்சள் நீராட்டு என தொடர்ந்து அழைப்பு ‘1 மணி நேரம் கூட எனக்கு தனிமையில்லை’: தொண்டர்களின் வற்புறுத்தலால் திருமாவளவன் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: