அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று குஜராத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 35வது லீக் போட்டி, அகமதாபாத்தில் நேற்று நடந்தது. அதில், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, டெல்லி அணியின் அபிஷேக் பொரெல், கருண் நாயர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதல் அடித்து ஆடத் துவங்கிய பொரெல், 9 பந்துகளில் 18 ரன் விளாசி, அர்ஷத் கான் பந்தில் முகம்மது சிராஜிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதன் பின், கருணுடன், கே.எல்.ராகுல் இணை சேர்ந்தார். இவர்களும் அற்புதமாக அடித்து ஆடியதால், 3.5 ஓவர்களில் டெல்லி, 50 ரன்களை வேட்டையாடியது. இந்த நிலையில், 14 பந்துகளில் 28 ரன் விளாசியிருந்த ராகுல், 5வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார்.
அதையடுத்து, கருண் நாயருடன், கேப்டன் அக்சர் படேல் இணை சேர்ந்தார். இவர்கள், 3வது விக்கெட்டுக்கு, 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்தனர். அப்போது 9வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா பந்தை எதிர்கொண்ட கருண் நாயர் (18 பந்து, 31 ரன்), அர்ஷத் கானிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின்னர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கினார். 9வது ஓவர் முடிவில், டெல்லி அணி, 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்னை எட்டியது. இந்நிலையில், 15வது ஓவரின் 2வது பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (31 ரன்), முகம்மது சிராஜ் பந்தில் அவுட்டானார். பின்னர், அசுதோஷ் சர்மா, படேலுடன் இணை சேர்ந்தார். 15வது ஓவர் முடிவில் டெல்லி, 150 ரன்களை எட்டியது. 18வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணாவின் முதல் இரு மந்திரப் பந்துகளில், அக்சர் படேல் (32 பந்து, 39 ரன்), விப்ரஜ் நிகாம் (0 ரன்) அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அடுத்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, புதிதாக உள்வந்த பெரெராவை (1 ரன்) வீழ்த்தினார். கடைசி ஓவரில் அசுதோஷ் சர்மா (19 பந்து, 37 ரன்), சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்தது. குஜராத் தரப்பில், பிரசித் கிருஷ்ணா 4, சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ், அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணியின் துவக்க வீரர்கள், கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். 2வது ஓவரில் சுப்மன் கில் (7 ரன்) ரன் அவுட்டானார். பின்னர், ஜோஸ் பட்லர் களமிறங்கினார். சுதர்சன் – பட்லர் இணை, 60 ரன்கள் குவித்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில், சாய் சுதர்சன் (21 பந்து, 36 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷெர்பான் ரூதர்போர்ட், பட்லர் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினர்.
ஸ்டார்க் வீசிய 15வது ஓவரை எதிர்கொண்ட பட்லர், தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி அரங்கை அதிரச் செய்தார். இந்த இணை, குஜராத் அணிக்காக, 3வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக, 115 ரன் குவித்த நிலையில், 19வது ஓவரில் ரூதர்போர்ட் (43 ரன்) ஆட்டமிழந்தார். கடைசியில், 19.2 ஓவர் முடிவில் குஜராத் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. இதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி இமாலய வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் (54 பந்து, 4 சிக்சர், 11 பவுண்டரி, 97 ரன்), ராகுல் தெவாதியா (11 ரன்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
The post டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் இமாலய வெற்றி: பட்டாசாய் வெடித்த பட்லர் 97 ரன் appeared first on Dinakaran.