புதுடெல்லி: ‘ஜவகர்லால் நேரு நமக்கு தைரியத்தையும், உண்மைக்காக நிற்கவும் கற்றுக் கொடுத்தார்’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித்துடனான பாட்காஸ்ட் பாணி உரையாடல் வீடியோவை எக்ஸ் மற்றும் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். ‘உண்மை-தைரியம் நேருவிடம் இருந்து நான் பெற்றவை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவுடன் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நேரு வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல. அவர் ஒரு தேடுபவர், சிந்தனையாளர்.
அவரது மிகப்பெரிய மரபு உண்மையைத் தொடர்ந்து பின்தொடர்வதில் உள்ளது. அது அவரது அனைத்து கொள்கைகளையும் வடிவமைத்தது. நேரு நமக்கு அரசியலைக் கற்பிக்கவில்லை. பயத்தை எதிர்கொள்ளவும் உண்மைக்காக நிற்கவும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் மற்றும் போஸ் என அனைவரும் உண்மையில் கற்பித்தது இதைத்தான். சோசலிசம் அல்ல, அரசியல் அல்ல – வெறும் தைரியம். உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்த்து காந்தி நின்றார். ஒடுக்குமுறையை எதிர்த்து சுதந்திரத்தை வலியுறுத்த நேரு இந்தியர்களுக்கு தைரியம் கொடுத்தார்.
நீங்கள் அகிம்சையை ஏற்றால், உண்மைதான் உங்கள் ஒரே ஆயுதம். அதிலிருந்து பின்வாங்கவில்லை. அதுதான் அவர்களை சிறந்த தலைவர்களாக மாற்றியது. இன்றைய இந்தியாவில் உண்மை இக்கட்டில் உள்ளது. நான் எனது தேர்வை செய்துவிட்டேன். அதற்காக நிற்பேன். எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்லை. இவ்வாறு கூறி உள்ளார்.
The post நான் எதற்கும் தயார்; உண்மையை, தைரியத்தை கற்பித்தவர் ஜவகர்லால் நேரு: ராகுல் காந்தி பெருமிதம் appeared first on Dinakaran.