உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் 2 வது நாள்: ரூ.22லட்சத்தில் கட்டப்படும் மாயனூர் பொது நூலகம் ஆய்வு

கிருஷ்ணராயபுரம்; ஏப். 18: ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ், கலெக்டர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் முகாமிட்டு 2வது நாளாக கள ஆய்வு செய்தார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் முகாமிட்டு உங்களைத் தேடி, உங்கள் ஊரில திட்டத்தின் கீழ், 2ம் நாளான நேற்று கள ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து கலெக்டர் தங்கவேல் தெரிவித்ததாவது; கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், நேற்று முன்தினம் 16ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கியது. கட்டளை சிந்தலவாடி பஞ்சப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் குடிநீர் பணிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் துப்புரவு மற்றும் குடிநீர் பணிகளை பார்வையிட்டு பொது மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாயனூர் பொது நூலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மணவாசி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் தயாரிக்கும் சமையல் கூடத்தின் சுகாதாரம் மற்றும் காலை உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் அப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பரை மற்றும் அதிநவீன கணினி ஆய்வகம் ஆய்வு செய்யப்பட்டது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்). சரவணன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள். தங்கராஜு (நிர்வாகம்) முருகேசன் (ஊராட்சி) ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் 2 வது நாள்: ரூ.22லட்சத்தில் கட்டப்படும் மாயனூர் பொது நூலகம் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: