கரூர் மாவட்டத்தில் விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம்

கரூர், ஏப். 18: கரூர் மாவட்டத்தில் விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் மே 1ம் தேதி முதல் துவங்கப்பட இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர், 2024-25 ஆம் ஆண்டிற்கான மான்ய கோரிக்கையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் SDAT-STAR (SPORTS TALENT ADVANCEMENT AND RECOGNITION) அகாடமி அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கருர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் எஸ்டிஏடி ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் & டென்னிஸ் விளையாட்டுக்கு மே 1 முதல் துவங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ள டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமுடைய 12 வயது முதல் 21 வயது வரையுள்ள 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். மேலும், தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாதத்தில் 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் போன்றவை வழங்கப்படும். மேலும், இந்த மையத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரர், வீராங்கணைகளுக்கான தேர்வு ஏப்ரல் 28ம்தேதி அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட 50 வயதுக்கு மேற்பட்ட டென்னிஸ் விளையாட்டு வீரர், வீராங்கணை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மேலும், 10ம் வகுப்பு முதல் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச, தேசிய, அளவிலான பெற்ற பதக்கங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக தொகை ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இது நிரந்தர பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானது. இதனடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ, நிரந்தர பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கருர் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஏப்ரல் 20ம்தேதி வரை அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரிலோ அல்லது என்ற dsokarur@gmail.com இ-மெயில் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 20ம்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டது.

தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முக தேர்வு கருர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஏப்ரல் 24 மற்றும் 25ம்தேதிகளில் நடைபெறும். எனவே, தகுதி வாய்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். 12 வயது முதல் 21 வயது வரை உள்ள டென்னிஸ் வீரர், வீராங்கணைகள் ஏப்ரல் 28ம்தேதி நடைபெறும் தேர்வில் பங்கு பெற்று பயன்பெற வேண்டும். மேலும், தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றுமு இளைஞர் நலன் அலுவலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம் அலுவலகத்திலோ அல்லது 7401703493 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்தில் விளையாட்டு திறன் மேம்பாட்டு மையம் appeared first on Dinakaran.

Related Stories: