3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான்: திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி எம்எல்ஏ பேச்சு

சென்னை: 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான் என்று திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி எம்எல்ஏ பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை, கலை பண்பாடு, தொல்லியல் ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு செங்கம் மு.பெ.கிரி (திமுக) பேசியதாவது: இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையைப் பற்றி என்னென்னவோ சொல்கிறார்கள். இந்த அரசு என்பது இந்து விரோத அரசு என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு தோன்றிய வரலாற்றிலிருந்து இன்று வரையில், திராவிட மாடலின் 4 ஆண்டுக்கால ஆட்சி தான் இந்துக்களுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சிறப்பான ஆண்டு.

தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண் ஓதுவார் நியமனம், 50 கோடி ரூபாயில் ஆதி திராவிடர் திருக்கோயில் திருப்பணி, ரூ.80 கோடியில் பழனி இடும்பன் மலை, திருநீர் மலை, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் ரோப் கார் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக அர்ச்சகர்களுக்கும் குடியிருப்பு கட்டித் தந்த ஒரே அரசு, திராவிட மாடல் அரசு. மன்னர்கள், மக்களாட்சியில் ஒப்படைக்கப்பட்ட அந்த ஆலயங்கள் மக்களாட்சி நடத்துகின்ற அரசிடத்திலே இல்லாமல் எங்களிடத்திலே தாருங்கள் என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகின்றேன்.

முதல்வர் உத்தரவின் பேரில், ஆயிரம் ஆண்டுகளான 714 கோயில்களைக் கண்டறிந்து ரூ.425 கோடி நிதி ஒதுக்கீட்டில் 53 கோயில்களும் மற்றும் இதர கோயில்கள் என்று சற்றேறக்குறைய 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஒரே ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி. கோயில் சொத்தை கொள்ளையடித்தவர்களிடமிருந்து மீட்டு, 956 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 7513.62 ஏக்கர் நிலம், ரூ.7,650 கோடி மதிப்பு சொத்தை மீட்டு, நவீன கருவிகளைக் கொண்டு, சுற்று வேலி அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் சட்டமன்றத் தொகுதி என்பது ஜவ்வாதுமலை உச்சியிலே ஆரம்பிக்கிறது.

இங்குள்ள மக்கள் வெறும் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இங்கு அரசுப் பள்ளி 23ம், தனியார் பள்ளிகள் 16ம் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளிகளில் மொத்தம் 5,499 மாணவர்கள் சராசரியாக 12ம் வகுப்பு படிக்கிறார்கள். இவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டுமானால் 70 முதல் 80 கி.மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் செங்கம் பகுதி உயர் கல்வியிலே பின்தங்கி இருக்கிறது என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த நிதியாண்டிலேயே செங்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைப் பெற்றுத் தர கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்த ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான்: திமுக எம்எல்ஏ மு.பெ.கிரி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: