பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

செய்யூர், ஏப்.17: செய்யூர் அருகே, பட்டா பெயர் மாற்றம் செய்ய 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமித்குமார்(46). இவருக்கு, அதே பகுதியில் பூர்வீக வீட்டு மனை உள்ளது. இதனையடுத்து, இவர் வீட்டு மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய அப்பகுதி பெண் கிராம நிர்வாக அலுவலரான சுதாவை(38) அமித்குமார் அனுகியுள்ளார். ஆனால், சுதா அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அமித் குமார் சுதாவை தொடர்பு கொண்ட போது பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சமாக 8 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த அமித்குமார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சரவணன், ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் அமித் குமாரிடம் ரசாயனம் தடவிய 8 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொடுத்துள்ளனர். மேலும், அதிகாரிகளின் ஆலோசனைப்படி அமித் குமார் சுதாவை அலுவலகத்தில் சந்தித்து அப்பணத்தை கொடுத்துள்ளார். சுதாவும் அப்பணத்தை பெற்றுக்கொள்ள, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சுதாவைவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது appeared first on Dinakaran.

Related Stories: