திருப்பூர்: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜ கூட்டணி அமைத்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி நடந்த கூட்டத்தின்போது பேசிய அதிமுக கவுன்சிலர் கண்ணப்பன் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக கூட்டணி அமைந்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் குணசேகரன், கண்ணப்பன் ஆகியோரின் பெயர்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாஜவின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி ஒரு வீடியோ வெளியிட்டார். ‘‘இனி பொதுவெளியில் பாஜ குறித்து பேசினால் நல்லா இருக்காது. தப்பாகி விடும்’’ என்ற மிரட்டல் விடுத்திருந்தார்.
ேமலும் பாஜவுடனான கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவிக்கும் வகையில் பேசியிருந்த குணசேகரனுக்கு பாஜ தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குணசேகரன் மற்றும் பாஜ வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் நேற்று திருப்பூரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது குணசேகரன் கூறும்போது, ‘‘திருப்பூரில் பாஜ, அதிமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. கட்சிக் கூட்டத்தில் பேசிய வீடியோ திரித்து வெட்டி வெளியிடப்பட்டுள்ளது. பாஜவுடன் கூட்டணி அமைத்தது மகிழ்ச்சியான ஒன்று’’ என்றார். அதிமுக தலைமை அழுத்தம் மற்றும் பாஜ மிரட்டல் காரணமாக மாஜி எம்எல்ஏ குணசேகரன் ஒரே நாளில் இப்படி ‘பல்டி’ அடித்திருப்பதாக தெரிகிறது. இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post பாஜவின் மிரட்டலுக்கு பயந்து அதிமுக மாஜி எம்எல்ஏ ‘பல்டி’: ‘கூட்டணி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறதாம்…’ appeared first on Dinakaran.
