நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ஒன்றிய அரசு, அமலாக்கத்துறைக்கு கண்டனம்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு மற்றும் அமலாக்கத்துறையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை கடந்த 9ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் காங்கிரசுடன் தொடர்புடைய ரூ.661 கோடி அசையாச் சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ஒன்றிய அரசையும், அமலாக்கத்துறையையும் கண்டித்து காங்கிரஸ் தரப்பில் நாடு தழுவிய போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகம் முன்பாக நடந்த போராட்டத்தில் சோனியா, ராகுலுக்கு ஆதரவாக தொண்டர்கள் பதாகைகள் ஏந்தி ஒன்றிய அரசு, அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டத்தை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடையை மீறி போராட்டம் நடத்தியதாக டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், எம்பி இம்ரான் பிரதாப்கரி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் முக்கிய தலைவர் சுப்ரியா னேட் போராட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ‘‘இந்த விவகாரத்தில் ஒரு பைசா கூட பண மோசடி நடக்கவில்லை. காந்தி குடும்பத்தையும், காங்கிரசையும் நசுக்க பாஜ அரசு முயற்சிக்கிறது என்பதுதான் உண்மை. அதை எதிர்த்து நாங்கள் கடுமையாக போராடுவோம். ராகுல் காந்தி அரசியல் செய்யும் விதம், அவர் எழுப்பும் பிரச்னைகள் காரணமாக பாஜ அவரைப் பார்த்து பயப்படுகிறது’’ என்றார். இதே போல, பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அமலாக்கத்துறை மண்டல அலுவலகம் முன்பாக காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

* ’தொடர்ந்து நாங்கள் குரல் எழுப்புவோம்’
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘’11 ஆண்டாக ஆட்சியில் உள்ள பாஜ அரசிடம் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. வெறும் பீதியை கிளப்ப மட்டுமே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மோடி ஜி இது காங்கிரஸ் கட்சி. ராகுல் மற்றும் சோனியா காந்தியின் குடும்பத்தினரின் ரத்தம் இந்த நாட்டின் மண்ணில் கலந்திருக்கிறது. எனவே இந்த பொய்யான அச்சுறுத்தல்களை வேறு யாரிடமாவது சென்று காட்டுங்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். உங்கள் தோல்விகள், முதலாளிகளுடனான உங்கள் கூட்டு, வெறுப்பு அரசியல், நீங்கள் ஏற்படுத்திய வேலையில்லா திண்டாட்டம், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினரின் நிலை குறித்து தொடர்ந்து சத்தமாக கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம்’’ என கூறி உள்ளார்.

* காங்.கை குறிவைக்கும் சர்வாதிகார பாஜ அரசு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘சர்வாதிகார பாஜ அரசு தனது சொந்த பாவங்களை மூடிமறைக்க, காங்கிரசை குறிவைக்கிறது. பாஜவின் தவறான பொருளாதார நிர்வாகம் கட்டுப்பாடற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொலைநோக்கு பார்வை இல்லை, தீர்வுகள் இல்லை. அனைத்தும் திசைதிருப்பல்கள் மட்டுமே உள்ளன. வரிகள், வர்த்தக போர் குறித்து எந்த தெளிவும் இல்லை. வெறும் வெற்று வார்த்தைகள் மட்டுமே மிஞ்சி உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததற்காக பாஜவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நாங்கள் பயப்பட மாட்டோம். உங்கள் தோல்விகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்’’ எனக்கூறி இப்பதிவில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார்.

The post நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ஒன்றிய அரசு, அமலாக்கத்துறைக்கு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: