சஹலை புகழ்ந்த நண்பி: வைரலாக்கிய நெட்டிசன்ஸ்

கொல்கத்தா அணியுடனான பரபரப்பான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹலின் மந்திரப் பந்துகளால் திக்குமுக்காடிய கொல்கத்தா வீரர்கள் ரன் எடுக்கத் திணறினர். 4 ஓவர்களை வீசிய சஹல், வெறும் 28 ரன் மட்டுமே விட்டுத் தந்து, 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, 12வது ஓவரில், அடுத்தடுத்த பந்துகளில் ரிங்கு சிங்கையும், ரமண்தீப் சிங்கையும் வீழ்த்தி கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தார். முன்னதாக, கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கிய ரகானேவையும், அதிரடி வீரர் ரகுவன்ஷியையும், சஹல் வீழ்த்தினார். அதனால், 95 ரன்னுக்குள் கொல்கத்தா அணி சுருண்டு, பஞ்சாப் திரில் வெற்றியை சுவைத்தது.
இதையடுத்து, சஹலுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அவரது நண்பியும், பிரபல ரேடியோ ஜாக்கியுமான ஆர்ஜே மாஹ்வாஷ், ‘என்னவொரு அற்புதமான திறமையுள்ள மனிதர்; முடியாததை நிகழ்த்திக் காட்டியுள்ளார்’ எனப் புகழ்ந்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை, நெட்டிசன்கள் வைரலாக்கி உள்ளனர். சஹல், இந்தாண்டு மார்ச் மாதம் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* கம்மி ரேட்டில் ஏலம்; கலக்கல் மாயாஜாலம்
பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட பல முன்னணி வீரர்கள், நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாக ஆடி ரசிகர்களையும், அணி நிர்வாகத்தையும் சோதனைக்குள்ளாக்கி வரும் நிலையில், சொற்ப பணத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஐபிஎல் போட்டிகளில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இளம் வீரர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பட்டியலில் ஒருவரான திக்வேஷ் ரதி, லக்னோ அணிக்காக, ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். 7 போட்டிகளில் ஆடியுள்ள இவர், 9 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து, தன் அணி வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்கிறார். டெல்லி அணிக்காக ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் விப்ரஜ் நிகாம். இவர், 5 போட்டிகளில் மட்டுமே ஆடி 7 முக்கிய விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். பஞ்சாப் அணிக்காக ரூ. 3.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட துவக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா, 5 போட்டிகளில் 194 ரன்களை குவித்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட், 220. கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கிய ரகானே, வெறும், ரூ. 1.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். இவர், 6 போட்டிகளில் 204 ரன்களை குவித்துள்ளார்.

* நடுவர்களின் சோதனையில் பெயில் ஆன சுனில் நரைன்
ஐபிஎல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேட்டின் அளவு, 10.79 செமீ அகலம், 96.4 செமீ நீளத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் இந்த விதியை மீறாமல் ஆடுகிறார்களா என அவ்வப்போது சோதித்து பார்ப்பதென, ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்து நடவடிக்கை எடுக்கத் துவங்கி உள்ளது. இந்த அதிரடி சோதனையில், முதன் முறையாக கொல்கத்தா அதிரடி வீரர் சுனில் நரைன் பெயிலாகி உள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, பேட்டிங் செய்ய வந்த சுனில் நரைனின் பேட்டை நடுவர்கள் சோதித்து பார்த்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் வகையில் அந்த பேட் இருந்துள்ளது. அதையடுத்து, வேறு பேட் கொண்டு வரப்பட்டு அதை சுனில் நரைன் பயன்படுத்தினார். இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சுனில் நரைன் அதிரடியாக ரன்களை குவித்து வியப்பில் ஆழ்த்தினார். அதற்கு, அவர் பயன்படுத்திய பேட்தான் காரணமோ என நெட்டிசன்கள் விமர்சிக்கத் துவங்கி உள்ளனர். பஞ்சாப்புடனான போட்டியின்போது, கடைசி வரிசையில் ஆடிய கொல்கத்தா வீரர் ஆன்ரிச் நார்ட்ஜேவும், இந்த டெஸ்டில் பெயிலாகி வேறு பேட்டை பயன்படுத்தினார். அதேசமயம், கொல்கத்தா அணியை சேர்ந்த இளம் வீரர் அங்கிரீஷ் ரகுவன்ஷி பேட் டெஸ்டில் பாஸ் ஆனார்.

* காலிறுதியில் போபண்ணா
ஜெர்மனியில் ஆண்களுக்கான ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் இரட்டையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, இங்கிலாந்தின் பென் ஷெல்டன் இணை, ஜாமி மர்ரே (பிரிட்டன்), ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணையுடன் மோதியது. அதில் போபண்ணா இணை ஒரு மணி 4 நிமிடங்களில் 6-4, 6-3 என நேர் செட்களில் ராஜீவ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. போபண்ணா இணை இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரர் சாண்டர் கில், போலந்து வீரர் ஜான் ஜியலின்ஸ்கி இணையுடன் மோதுகிறது.

The post சஹலை புகழ்ந்த நண்பி: வைரலாக்கிய நெட்டிசன்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: