ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ரூ.48ஆயிரம் கோடி மதிப்புள்ள பிஏசிஎல் நிறுவன மோசடி தொடர்பாக ராஜஸ்தானின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப் சிங் வீடு உட்பட மொத்தம் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி வீட்டின் முன் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும் குல்வந்த் சிங் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் போக்குவரத்து, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பிரதாப் சிங் பணியாற்றியவர். இது குறித்து பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் கூறுகையில்,‘‘அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது. நான் அரசுக்கு எதிராக பேசி வருவதால் என்னை பயமுறுத்துவதற்காக இந்த நடவடிக்கை. நான் எந்த தவறும் செய்யவில்லை. அமலாக்கத்துறைக்கு பயப்படவில்லை” என்றார். இதனிடையே பிரதாப் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர்.
The post ரூ.48,000 கோடி ஊழல் வழக்கு: ராஜஸ்தான் காங்.தலைவர் பிரதாப் சிங் வீட்டில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.