2.4 லட்சம் பேரில் 960 பேர் மட்டுமே; ஐபிஎஸ் காவல்துறையில் 90% பெண்கள் ஜூனியர் பணிகளில் உள்ளனர்: இந்திய நீதி அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: காவல்துறையில் பாலின பாகுபாட்டை சுட்டிக்காட்டிய இந்திய நீதி அறிக்கையில், 2.4 லட்சம் பெண் காவலர்களில் 90 சதவீதம் பேர் கான்ஸ்டபிள்களாக பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது. 960 பேர் மட்டுமே ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ளனர். டாடா அறக்கட்டளை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, சட்ட உதவி ஆகிய துறைகளின் செயல்திறனை கண்காணித்து 2025ம் ஆண்டுக்கான இந்திய நீதி அறிக்கையை (ஐஜேஆர்) வெளியிட்டுள்ளன. அதில், சட்டத்துறையில் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், எந்த ஒரு மாநிலமும் காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான இலக்கை எட்டவில்லை என கூறப்பட்டுள்ளது. விரைவாக நீதி வழங்குவதில் கர்நாடகா தொடர்ந்து 4வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதைத் தொடர்ந்து சிறந்த பன்முகத்தன்மை, உள்கட்டமைப்பு, பணியாளர் நியமனத்தில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவல்துறையில் உள்ள பாலின பாகுபாட்டை சுட்டிக்காட்டி உள்ள இந்த அறிக்கை, நாடு முழுவதும் மொத்தமுள்ள 2.4 லட்சம் பெண் காவலர்களில் வெறும் 960 பேர் மட்டுமே ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பதாகவும், 24,322 பேர் ஐபிஎஸ் அல்லாத துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர், துணை ஆய்வாளர் பதவிகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே சமயம், 2.17 லட்சம் பெண் காவலர்கள் கான்ஸ்டபிள் தர பதவிகளில் மட்டுமே இருப்பதாக கூறி உள்ளது. மொத்தம் 5,047 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில் அதில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.

அதிகபட்சமாக மபியில் டிஎஸ்பியாக 133 பெண் அதிகாரிகள் உள்ளனர். காவல்துறையில் எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவமும் குறைந்து 17%, 12% என்ற அளவிலேயே உள்ளன. தற்போது, 78% காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையங்களும், 86% சிறைகளில் வீடியோ கான்பரன்ஸ் வசதியும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறைச்சாலை நெரிசல் என்பது கவலைக்குரிய மற்றொரு அம்சமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய சராசரி 131 சதவீதம். அதிகபட்சமாக உபியில் 3ல் 1 சிறையில் 250 சதவீதத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 775 கைதிகளுக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். அரியானா, மேற்கு வங்கம், உபி போன்ற மாநிலங்களில் இந்த விகிதாச்சாரம் 1000க்கு 1 ஆக உள்ளது.

10 லட்சம் மக்களுக்கு ஒரு நீதிபதி மட்டுமே
நீதித்துறையை பொருத்த வரையில், கடுமையான உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாக ஐஜேஆர் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இது சட்ட ஆணையத்தின் பரிந்துரையான 50 நீதிபதிகளை விட மிகக் குறைவு. உயர் நீதிமன்றங்கள் 33 சதவீத காலியிடங்களும், மாவட்ட நீதிமன்றங்களில் 21 சதவீத காலிபணியிடங்களும் உள்ளன. இது மிகப்பெரிய பணிச்சுமைக்கு வழிவகுக்கிறது. தேசிய அளவில் மாவட்ட நீதிமன்றங்களில் ஒவ்வொரு நீதிபதியும் சராசரியாக 2,200 வழக்குகளை கையாளுகின்றனர். அலகாபாத், மத்தியப் பிரதேசம் போன்ற உயர் நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி 15,000 வழக்குகள் வகை கையாள வேண்டி உள்ளது.

The post 2.4 லட்சம் பேரில் 960 பேர் மட்டுமே; ஐபிஎஸ் காவல்துறையில் 90% பெண்கள் ஜூனியர் பணிகளில் உள்ளனர்: இந்திய நீதி அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: