43 வயதில் ஆட்டநாயகன் ‘தல’யின் தலையாய சாதனை

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, கடைசி வரை ஆட்டமிழக்காமல், 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்து, சென்னை அணியை இக்கட்டான தருணத்தில் வெற்றி பெறச் செய்தார். அதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம், மிக அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது வென்றவராக, 11 ஆண்டு சாதனையை அவர் தகர்த்து எறிந்துள்ளார். 43 ஆண்டுகள், 280 நாள் கடந்த நிலையில் தோனி இந்த சாதனையை படைத்து அவரது ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். இந்த பட்டியலில், 2014ல் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிய, பிரவீன் டாம்பே (42 ஆண்டு, 208 நாள்) ஆட்ட நாயகன் விருது பெற்று, முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

200 விக்கெட்டுகளை வீழ்த்தி தோனி அசத்தல்
ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக, 200 பேரை வீழ்த்திய சாதனை வீரராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ்.தோனி உருவெடுத்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடனான போட்டியில், ரவீந்திர ஜடேஜா வீசிய ஓவரில், லக்னோ அணியின் ஆயுஷ் படோனியை, தோனி மின்னல் வேகத்தில் அற்புதமாக ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். விக்கெட் கீப்பராக ஸ்டம்பிங் செய்து அவர் எடுத்துள்ள 46வது விக்கெட் இது. தவிர, அவர் 155 பேரை கேட்ச் செய்து அவுட்டாக்கி உள்ளார். ஒட்டு மொத்தத்தில் 201 விக்கெட்டுகளை, தோனி வீழ்த்தி மகத்தான சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில், தினேஷ் கார்த்திக் 182, ஏபி டிவில்லியர்ஸ் 126, ராபின் உத்தப்பா 124, விருத்திமான் சாஹா 118 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

The post 43 வயதில் ஆட்டநாயகன் ‘தல’யின் தலையாய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: