கோபி: கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி அத்திக்கடவு, அவினாசி திட்ட விவசாயிகள் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை என்று கூறி நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார். இதன்பின்னர் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாக தெரியவந்தது.
தொடர்ந்து எடப்பாடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் கலந்துகொள்ளாமல் இருந்தார். சமீபத்தில் கட்சியின் தலைமையிடம் தெரிவிக்காமலே டெல்லிக்கு சென்று ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். பாஜவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளாததால் செங்கோட்டையனை முன்னிறுத்தி அதிமுகவை உடைக்க பாஜ தேசிய தலைமை திட்டமிடுவதாக பேசப்பட்டது. ஆனால் திடீரென பாஜ-அதிமுக கூட்டணி உருவானது.
இருந்தபோதிலும் எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதை செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிமுக-பாஜ கூட்டணி குறித்து செங்கோட்டையனிடம் கேட்டபோது, ‘‘பொதுச்செயலாளர்…’’ என்று ஒற்றை வார்த்தையை மட்டும் பயன்படுத்தினார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் கோபியில் தனியார் நிறுவன துவக்க விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போதும் எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்தார்.
அவர் பேசுகையில், ‘‘சிறந்த கல்வியை தரக்கூடிய ஆண்டாக, அனைவரும் மகிழ்ச்சியோடு வாழுகிற ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். அதிமுக, பாஜ கூட்டணி குறித்து கேட்டபோது, எந்த கருத்தையும் அவர் கூறாமல் சென்றார்.
The post கோபியில் நடந்த விழாவில் எடப்பாடி பெயரை மீண்டும் தவிர்த்த செங்கோட்டையன் appeared first on Dinakaran.