சென்னை: பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறுகையில், பணி நிரந்தம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன் உண்ணா விரத போராட்டம் நடத்தினர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்ததால், காவலர் அவர்களை கைது செய்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விட்டனர். அவர்கள் அங்கேயும் போராட்டம் நடத்தியதால் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவிலியர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
ஆறு நாட்களாக போராட்டம் நடத்தியவர்களை தற்போது கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு அவர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
