சாலையை சீரமைக்க கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

திருவாடானை : திருவாடானை அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருவாடானை அருகே கீழஅரும்பூர் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்திற்கு செல்லும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள தார்ச்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாகி பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் இந்த சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி அரும்பூர் ஊராட்சி நிர்வாகம், திருவாடானை யூனியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதன்பிறகு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை வட்டாட்சியர் ஆண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அலைபேசி மூலம் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு பேசியபிறகு சேதமடைந்த சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: