சாக்கடை கால்வாயில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட பெண்; மூக்குத்தியை வைத்து கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ்: ரியல் எஸ்டேட் அதிபரான கணவன் கைது

புதுடெல்லி: டெல்லியின் சாக்கடை கால்வாயில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட பெண்ணின் மூக்குத்தியை வைத்து கொலையாளியை கண்டுபிடித்த போலீசார், அந்த பெண்ணின் கணவரான ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்தனர். டெல்லி நகர் பகுதியில் கடந்த மார்ச் 15ம் தேதி பெண் ஒருவரின் சடலம், கல் மற்றும் சிமெண்ட் சாக்குடன் கட்டப்பட்டு அமுக்கப்பட்ட நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் சீமா சிங்; அவரது வயது 47. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சீமாவின் மூக்குத்தியே, புலன் விசாரணையில் துப்பு கொடுத்து உதவியது. அந்தப் பெண்ணின் மூக்குத்தி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு நகைக்கடையில் வாங்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களை தனிப்படை சேகரித்தது. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அனில்குமார் என்பவர் இந்த நகையை வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அனில் குமாரைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணின் சடலம் குறித்து விசாரித்தனர். ஆனால் அவர் முரண்பாடான வாக்குமூலங்களை அளித்தார். பின்னர், அவரது மனைவியிடம் பேச வேண்டும் என்று தனிப்படை போலீசார் கேட்டனர்.

ஆனால் அவர் தனது மனைவி வெளியூர் சென்று இருப்பதாக கூறினார். இதனால் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, துவாரகாவில் உள்ள அனில்குமாரின் அலுவலகத்திற்குச் சென்ற தனிப்படை போலீசார், அங்குள்ள டைரியில் இருந்து அவரது மாமியாரின் செல்போன் எண் கிடைத்தது. அதில் தொடர்பு கொண்டபோது, கடந்த மார்ச் 11ம் தேதிக்குப் பிறகு சீமா சிங் தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று அவரது தாய் தெரிவித்தார். இதுதொடர்பாக ஏற்கனவே அனில் குமாரைத் தொடர்பு கொண்டு குடும்பத்தினர் கேட்டபோது, சீமா ஜெய்ப்பூரில் இருப்பதாகவும், யாருடனும் பேசும் மனநிலையில் அவர் இல்லை என்றும் அவர் கூறியதாக சீமாவின் சகோதரி கூறினார்.

சீமாவின் மனநிலை சரியானதும் தங்களுடன் பேசுவார் என்று அனில் குமார் தங்களை நம்ப வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்பின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை பார்த்து, இறந்தது சீமா சிங் தான் என்பதை அவரது தாய் உறுதி செய்தார். மேலும் அந்த பெண்ணின் மகனும், இறந்தது தனது தாய்தான் என்பதை உறுதிப்படுத்தினார். பிரேதப் பரிசோதனையில், அப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. மனைவியை கொன்றுவிட்டு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடை கால்வாயில் வீசிய கணவர் அனில் குமாரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கொலைக்கான காரணத்தை அவர் கூற மறுத்து வரும் நிலையில், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

The post சாக்கடை கால்வாயில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட பெண்; மூக்குத்தியை வைத்து கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ்: ரியல் எஸ்டேட் அதிபரான கணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: