பாலக்கோடு: பாலக்கோடு அருகே இறைச்சி கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, காதலன் உள்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கொரவன் திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(41). இவர், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் வசித்து வந்தார். பாலக்கோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே கோழி இறைச்சிக்கடை மற்றும் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். இவர் முதல் மனைவியை பிரிந்து பாலக்கோடு எர்ரனஅள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தம்மாள்(36) என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறாள். கோவிந்தம்மாள், கணவருக்கு உதவியாக கோழிக்கடைக்கு சென்று வருவார். கடந்த சில வருடங்களாக கோவிந்தம்மாளுக்கும், தனியார் நிதி நிறுவன ஊழியரான நாகராஜிக்கும் (27) பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது.
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவிந்தம்மாள், நாகராஜ் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த குமார் அவர்களை கண்டித்துள்ளார். மேலும், தகாத உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, குமார் ஆத்திரத்தில் கோவிந்தம்மாளை அடித்து துரத்தியுள்ளார். இதையடுத்து, அவர் பாலக்கோடு அண்ணாநகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தஞ்சமடைந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி காலை குமார் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். சந்தேகத்தின்பேரில், கோவிந்தம்மாளை பிடித்து விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலுக்கு குமார் இடையூறாக இருந்ததால், தீர்த்து கட்டியது தெரிய வந்தது.
கோவிந்தம்மாள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது: தகாத உறவை குமார் கண்டித்ததால், அவரை கொலை செய்து விட்டு கோழிக்கடை, இரும்பு கடையை அபகரித்து உல்லாசமாக வாழலாம் என காதலன் நாகராஜ் உடன் சேர்ந்து கோவிந்தம்மாள் சதி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த 8ம் தேதி இரவு 11 மணிக்கு காதலன் நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான சொன்னம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (27), சாமியார் கொட்டாய் தமிழரசன்(25) ஆகியோர், மது போதையில் சென்று, கடையில் தூங்கிக் கொண்டிருந்த குமாரை கை, கால்களை கயிற்றால் கட்டி போட்டு தலையணையை முகத்தில் வைத்து அமுக்கியுள்ளனர். அப்போதும் உயிர் போகாததால், கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்னர். இதில், அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் கோவிந்தம்மாள், நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் உள்ளிட்ட 4பேரையும் போலீசார் நேற்று கைது செய்து, தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post 27 வயது வாலிபருடன் தகாத உறவுக்காக இறைச்சி கடைக்காரரை கொன்ற 36 வயது மனைவி: காதலன், நண்பர்களுடன் கைது appeared first on Dinakaran.