ஐபிஎல் போட்டியில் இன்று சேப்பாக்கத்தில் சிலிர்த்தெழுமா சென்னை?

சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி இதுவரை தான் விளையாடிய 5 போட்டிகளில் மும்பை அணியுடனான போட்டியில் மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி, பஞ்சாப் அணிகளுடனான போட்டிகளில் தோல்வியை தழுவியது.

ரகானே தலைமையிலான நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை தான் விளையாடிய 5 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளுடனான போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளது. பெங்களூர், மும்பை, லக்னோ அணிகளுடனான போட்டிகளில் தோல்வியை தழுவியது. புள்ளி பட்டியலில் சென்னை அணி 9வது இடத்திலும், கொல்கத்தா அணி 6வது இடத்திலும் உள்ளது (பெங்களூர் – டெல்லி போட்டிக்கு முன்).

சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். சென்னை அணியில் ஐபிஎல் டாப் விக்கெட் டேக்கரான நூர் அகமது, அஸ்வின், ஜடேஜா மற்றும் கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் என சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பனி இல்லாதது மற்றும் உமிழ்நீர் பயன்படுத்துவதும் பந்து வீச்சாளர்களுக்கு மேலும் சாதகமாகி இருப்பதால் இந்த பிட்சில் முதலில் பேட்டிங் செய்வது சிறந்ததாக இருக்கும். பார்க்கலாம், சென்னை மீண்டும் வெற்றிக்கனியை எட்டி பறிக்குமா என்று?

* ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் இதுவரை நேருக்கு நேர் 29 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 19 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தா அணி 10 போட்டிகளில் வென்றுள்ளது.

* ‘தல’ மீண்டும் கேப்டன்
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக முன்னாள் கேப்டன் டோனியே மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ‘தல’ என சென்னை ரசிகர்களால் அழைக்கப்படும் டோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே டோனி கேப்டனாக இருந்தபோது, சென்னை அணி 2010, 2011, 2018, 2021, 2023 ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வரும் ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள டோனி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என நிர்வாகம் நம்புகிறது.

The post ஐபிஎல் போட்டியில் இன்று சேப்பாக்கத்தில் சிலிர்த்தெழுமா சென்னை? appeared first on Dinakaran.

Related Stories: