தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் எச்சரிக்கை பாடம்: சித்தராமையா கருத்து

பெங்களூரு: தமிழ்நாடு மாநில ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் எச்சரிக்கை பாடம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இது குறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் என்.ஆர்.ரவியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஆளுநருக்கான அதிகாரம் என்ற பெயரில் ஒருதலை பட்சமாக எடுத்த தீர்மானங்களை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, தமிழ்நாடு ஆளுநருக்கு மட்டுமில்லாமல், நாட்டில் அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் அவர்களை பின்னால் இருந்து இயக்கி வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பாடம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநரின் கடமைகளின் நோக்கத்தை தெளிவாக வரையறுத்து, இதனால் ஏற்படும் அனைத்து குழப்பத்தையும் நீக்கும். மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மூன்று மாதங்களுக்குள் கையெழுத்து போட வேண்டும் என்ற காலகெடுவையும் உச்சநீதிமன்றம் விதித்துள்ளதின் மூலம், இதுவரை இருந்த குழப்பங்களை நீக்கி, இந்த செயல்முறையை முடிக்க உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையிலான தேவையற்ற மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் எச்சரிக்கை பாடம்: சித்தராமையா கருத்து appeared first on Dinakaran.

Related Stories: