விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28ம் தேதி நடந்தது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தன் மூத்த மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்க தலைவராக அறிவித்து, “அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார்… எனக்கா?” என்றார். அதற்கு ராமதாஸ் “ஆமாம்” என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது அன்புமணி, “எனக்கெல்லாம் வேண்டாம். அவர் இப்போதுதான் கட்சிக்கு வந்து 4 மாதம் ஆகிறது. உடனடியாக அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், என்ன அனுபவம் இருக்கிறது அவருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும்போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு…” என்று ஆவேசமாக பேசினார்.
அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்தக் கட்சியில் இருக்க முடியாது,” என்றார். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், “என்ன சரி, சரி என்றால் போ அப்போ,” என்றார்.
பின்னர் ராமதாஸ், “முகுந்தன் பரசுராமனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக
நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், “சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, “இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம்” என்றார்.
அதற்குள் ராமதாஸ், “மீண்டும் கூறுகிறேன்… உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது” என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து சலசலப்பில் ஈடுபட்டனர்.
அதற்கு ராமதாஸ், “நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். என் பேச்சை கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்,” என்றார்.
அப்போதிருந்தே ராமாதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அன்புமணி எதிர்ப்பால் பேரன் முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட முடியாமல் போனது. அதே நேரத்தில் இந்த கூட்டம் முடிந்த பின்னர் வீடு திரும்பிய ராமதாஸ் காரை, அன்புமணியின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால், ராமதாசால் அரை மணி நேரத்திற்கும் மேலாக காரை எடுக்க முடியாத நிலை உருவானது.
பிறகு அன்புமணியை தான் பெரும்பாலான நிர்வாகிகள் பனையூருக்கு சென்று சந்தித்து வந்தனர். அன்புமணி தைலாபுரம் வருவதை தவிர்த்து வந்தார். ஒரு சில நிர்வாகிகள் மட்டும் ராமதாசை சந்தித்து வந்தனர். பாமகவில் 90 சதவீதம் ஆதரவாளர்கள் அன்புமணி பக்கம் இருந்தனர். இதனால், அவரது செல்வாக்கை குறைக்க வேண்டும். தலைவர் பதவியில் இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறார். பதவியை பறித்தால் தான் பேச்சை கேட்பார் என ராமதாஸ் முடிவுக்கு வந்தார்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முக்கிய முடிவு ஒன்றை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”பாமக தலைவராக இன்று முதல் நான் (ராமதாஸ்) பொறுப்பு ஏற்று இருக்கிறேன், நிறுவனரும் நான்தான். அன்புமணி செயல் தலைவராக இருப்பார். ஜி.கே.மணி கவுரவ தலைவராக தொடர்வார். செயற்குழு, பொதுக்குழு கூடி முக்கிய முடிவு அறிவிக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்தவே பாமகவின் தலைவராகும் முடிவை எடுத்தேன். நான் தலைவரானதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. கூட்டணி குறித்த விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேசி எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து சிறுக சிறுக தெரிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் தெரிவித்தார். ராமதாஸின் முடிவுக்கு மேலும் ஒரு காரணம் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் முடிவு எடுத்தார். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து அனைத்து விவகாரங்களும் முடிந்தது. அப்போது திடீரென அன்புமணி பாஜவுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறி பாஜ அணிக்கு தாவினார். அந்த தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. அப்போது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருந்தால் 7 இடங்களிலாவது வெற்றி பெற்று இருப்போம். அதில் நாம் 3 அல்லது 4 சீட் வெற்றி பெற்று இருக்கலாம் என்றார்.
இதனால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் முடிவு எடுத்தார். வரக்கூடிய தேர்தலில் ேதாற்றால் தொண்டர்கள் சோர்வடைந்து போவார்கள். எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் இருந்து வருகிறார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணிக்கு வேண்டுமானால் பாஜ வரட்டும். மாநில கட்சியுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும். டெல்லி கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றும் வெளிப்படையாக ராமதாஸ் தெரிவித்தார்.
அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் தான் பாமக கூட்டணி வைக்க வேண்டும். அதிமுக வேண்டுமென்றால் பாஜ கூட்டணிக்கு வந்தால் பிரச்னை இல்லை என்றும் கூறினார். இதனால் மீண்டும் அப்பா, மகன் மோதல் மீண்டும் ஏற்பட்டதால்தான், ராமதாஸ் இந்த முடிவை எடுத்ததாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அப்பா, மகன் மோதலால் பாமக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். அன்புமணி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற பரபரப்பும் எழுந்துள்ளது.
ராமதாஸ் வீட்டு முன் போராட்டம்: ராமதாசின் இந்த திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து அன்புமணியின் ஆதரவாளரான முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகல் ராமதாஸ் வீட்டின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தற்போதைய வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாமக நகர செயலாளர் ராஜேசுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் திண்டிவனம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ராமதாஸ் முடிவுக்கு பாமக பொருளாளர் எதிர்ப்பு…
அன்புமணிக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார். அவரது முகநூல் பக்கத்தில், பாமகவின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு.. அன்புதானே எல்லாம் என்றும் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்..ஏற்கனவே சொன்னது தான்… தனிநபர்களை விட தலைமை பெரியது, தலைமையை விட இயக்கம் பெரியது, இயக்கத்தைவிட சமூகம் பெரியது, சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் அது தற்போதைய சூழலில் அன்புமணி தலைமையில் மட்டுமே…அன்புமணி வழியில் நாம்.. என்று பதிவிட்டுள்ளார்.
மாற்றம் ஏன்? ராமதாஸ் விளக்கம்…
அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பாட்டாளி சொந்தங்களும், பொது மக்களும், எந்தவொரு முன்அனுமதியும் இல்லாமல் என்னை சந்தித்து செல்கின்றனர், அவர்கள் என்னிடத்தில் கேட்பதெல்லாம் 1989-ன் தொடக்கத்தில் ஐயாவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது எங்களுக்கு தெரியாது. கட்சி மற்றும் சங்கத்தின் புதிய தலைமுறையினர் எனது தலைமையின்கீழ் சிறிதுகாலம் பணியாற்ற வேண்டுமென்று அன்பு கட்டளையிட்டனர். அதன்பேரில் அதனை தடுக்க மனமில்லாமலும் அவர்கள் ஆசையை நிறைவேற்றிட வேண்டியும், 2026-ல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளேன். அதனை செயல்படுத்த வேண்டி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்துள்ளேன்.
திலகபாமாவை சந்திக்க மறுப்பு
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய முடிவுக்கு மாநில பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்து வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதைதொடர்ந்து நேற்று மாலை பாமக சக நிர்வாகிகளுடன் திலகபாமாவும் ராமதாசை சந்திக்க தைலாபுரம் சென்றார். ஆனால் அவரை சந்திக்க ராமதாஸ் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றத்துடன் காரில் திலகபாமா புறப்பட்டு சென்றார். இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘யாரையும் நான் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் சந்திக்கவில்லை’ எனக்கூறி விட்டு சென்றார்.
குடும்பத்தினர் சமாதானம்…
பாமக பொதுக்குழுவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் மோதல் எழுந்தது. இளைஞர் அணி தலைவராக முகுந்தனை ஏற்க முடியாது என்று அன்புமணி தெரிவித்தார். ஆனால் அவர்தான் நீடிப்பார் என்று ராமதாஸ் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மோதல் எழுந்தது. இருவரையும் குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர். அதேபோல, நேற்று மாலையில் ராமதாசின் மகள்கள் கவிதா, காந்தி ஆகியோர் தைலாபுரம் வந்தனர். ராமதாசை சந்தித்துப் பேசினர். அவரை சமாதானப்படுத்தினர். இதனால் பதவி பறிப்பு வாபஸ் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வழக்கமாக ராமதாஸ் அறிவிப்பதும், குடும்பத்தினர் பேசி சமாதானப்படுத்தியதும், வாபஸ் வாங்குவதும் வாடிக்கை. அதேபோலத்தான் இப்போதும் நடக்கும் என்கின்றனர் பாமக தொண்டர்கள்.
அன்புமணியை நீக்க அதிகாரம் உண்டா?
பாமக தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாமகவில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர். முன்னதாக, அன்புமணியை தலைவராக அறிவித்த போதும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு…
பாமக தலைவராக நானே தொடர்வேன் என ராமதாஸ் அறிவித்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று மாலை முக்கிய நிர்வாகிகளான சேலம் முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, மயிலம் எம்எல்ஏ சிவகுமார், முன்னாள் எம்பி செந்தில், வழக்கறிஞர் பாலு, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் மூத்த மகள் காந்திமதி, 2வது மகள் கவிதா ஆகியோர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
The post கூட்டணி முடிவு, இளைஞர் அணி தலைவர் பதவி விவகாரத்தில் மோதல்; அன்புமணியின் தலைவர் பதவி பறிப்பு: ‘இனி நான் தான் பாமக தலைவர்’- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.