ஐபிஎல் 23வது லீக் போட்டி; ராஜஸ்தானை வென்றது குஜராத்

அகமதாபாத், ஏப். 10: ஐபிஎல் 23வது லீக் போட்டியில் நேற்று, குஜராத் அணி 58 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீசியது. குஜராத் அணியில் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர். 3வது ஓவரில் ஆர்ச்சரிடம், சுப்மன் கில் கிளீன் போல்டானார். பின், சுதர்சனுடன், ஜோஸ் பட்லர் இணை சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 80 ரன் சேர்த்த நிலையில், 10வது ஓவரில் ஜோஸ் பட்லர் 36 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த ஷாருக்கான், சாய் சுதர்சனுடன் இணை சேர்ந்தார். அதே ஓவரில் சாய் சுதர்சன் 50 ரன்களை கடந்தார்.

இந்நிலையில், 16வது ஓவரில், தீக்சனா வீசிய பந்தை ஷாருக்கான் (20 பந்து, 36 ரன்) ஏறி அடிக்க முயன்றபோது, சஞ்சு சாம்சன், ஸ்டம்ப் செய்து அவரை அவுட்டாக்கினார். பின்னர், ஷெர்பான் ரூதர்போர்டு களமிறங்கினார். அவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்காமல், சந்தீப் சர்மா வீசிய பந்தில், 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதையடுத்து, ராகுல் தெவாதியா, சுதர்சனுடன் இணை சேர்ந்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில், சாய் சுதர்சன் (53 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி, 82 ரன்), சஞ்சு சாம்சனிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரஷித் கான் உள்வந்தார். அதே ஓவரில், ரஷித் கான் 12 ரன்னில், தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார்.20 ஓவர் முடிவில், குஜராத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில், தீக்சனா, தேஷ்பாண்டே தலா 2, ஆர்ச்சர், சந்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன் மட்டுமே எடுத்து 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஹெட்மேயர் 52 ரன், சஞ்சு சாம்சன் 41 ரன், பராக் 26 ரன் எடுத்தனர். குஜராத் அணி பந்து வீச்சில் ப்ரசித் கிருஷ்ணா 3 விக்கெட், சாய்கிஷோர், ரஷித்கான் தலா 2 விக்கெட், சிராஜ், அர்ஷத்கான், குல்வந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ராஜஸ்தான் அணியில் ஹசரங்கா ‘மிஸ்ஸிங்’
குஜராத் அணியுடனான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான வனிந்து ஹசரங்கா ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர், நேற்றைய அணியில் இடம்பெறவில்லை என, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார். அவருக்கு பதிலாக இடது கை பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சாம்சன் கூறினார். ராஜஸ்தான் அணிக்காக இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள ஹசரங்கா, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக சென்னை அணியுடனான முதல் போட்டியில் ஹசரங்கா 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு துாண்டுகோலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஐபிஎல் 23வது லீக் போட்டி; ராஜஸ்தானை வென்றது குஜராத் appeared first on Dinakaran.

Related Stories: