அயோத்தி கோயிலில் ராமர் தர்பார் மே 23ல் பிரதிஷ்டை: ஜூன் 6 முதல் தரிசிக்கலாம்

லக்னோ: அயோத்தி ராமர் கோயிலில் ராமர் தர்பார் மே 23ல் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும், மன்னர் ராமரை ஜூன் 6ம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என்றும் கோயில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரான பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதைத் தொடர்ந்து குழந்தை ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அதே சமயம், கோயிலின் எஞ்சிய கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்நிலையில், ராமர் கோயிலின் முதல் தளத்தில் ராமர் தர்பார் நிறுவப்படும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.

இது குறித்து கோயில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அளித்த பேட்டியில், ‘‘ராமர் கோயிலின் முதல் மாடியில் ராமர் தர்பார் பிரதிஷ்டை வரும் மே 23ம் தேதி நடக்க உள்ளது. இந்த தர்பாரில் மன்னர் உருவில் ராமர் பக்தர்களுக்கு அருள்புரிவார். அவருடன் சீதை, லட்சுமணன், பரதன், சத்ருகன் மற்றும் ஹனுமன் சிலைகளும் இடம்பெறும். ஏற்கனவே குழந்தை ராமர் பிரான பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இந்த நிகழ்வை பிரதிஷ்டை என குறிப்பிட முடியாது. அதே போல, இதற்கான பிரமாண்ட விழாக்களும் நடைபெற திட்டமிடவில்லை. ராமர் தர்பார் அமைக்கப்படும் மே 23ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் செய்யப்படும். பின்னர் ஜூன் 6ம் தேதி முதல் மன்னர் ராமரை பக்தர்கள் தரிசிக்கலாம்’’ என்றார்.

தர்பாரில் வைக்கப்படும் மன்னர் ராமர் சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டது. ஜெய்ப்பூர் வெள்ளை பளிங்கு கற்களால் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மன்னர் ராமர், சீதை உள்ளிட்ட சிலைகள் மே 23ல் அயோத்திக்கு கொண்டு வரப்படும். ராமர் தர்பார் அமைக்கப்பட்டதுடன், 2020ல் தொடங்கப்பட்ட பிரதான கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைகின்றன. கோயிலின் சுற்றுச்சுவர் மட்டும் சில மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.

The post அயோத்தி கோயிலில் ராமர் தர்பார் மே 23ல் பிரதிஷ்டை: ஜூன் 6 முதல் தரிசிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: