இந்திய பாரா போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்க தொகை: துணைமுதல்வர் உதயநிதி வழங்கினார்

சென்னை: புது டில்லியில் சில நாட்களுக்கு முன்பு முடிந்த 2வது கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகளில் 74 பதக்கங்களை தமிழ்நாட்டின் 62 வீரர், வீராங்கனைகள் வென்றனர். இவர்களை பாராட்டி தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாார்பில் ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பதக்கம் வென்றவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து துணை முதலமைச்சர் கூறியதாவது:
இந்த 4 ஆண்டுகளில் 258 பாரா ஆட்டக்காரர்களுக்கு 27.18 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை’ மூலமாக 198 பாரா ஆட்டக்காரர்களுக்கு 5 கோடி ரூபாய் உபகரணங்கள் வாங்க, போட்டியில் பங்கேற்க உதவித் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு வாகையர் அறக்கட்டளை (டிசிஎப்) நிதியிலிருந்து இந்தோனேசியாவில் இம்மாதம் நடைபெற உள்ள ‘ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச்’ போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தர்ஷனாவுக்கு 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய மலையேற்ற சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள சைக்ளிங் வீராங்கனைகள் ரமணி, சவுபர்ணிகா ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார். அவர்களுக்கு 7.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன சைக்கிள்களையும் அளித்தார். மேலும் தடகள வீரர் மாரி ஆனந்த்துக்கு 1.6 லட்ச ரூபாய் மதிப்பிலான போல் வால்ட் உபகரணத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி துணை தலைவர்கள் ராமச்சந்திரன், டாக்டர் அசோக், உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சர்வதேச பாரா தடகள வீரர் ரமேஷ் சண்முகம், வீராங்கனை கீர்த்திகா ஜெயச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post இந்திய பாரா போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்க தொகை: துணைமுதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: