வங்கதேசத்தில் இருந்து இந்தியா வழியாக சரக்குகளை பிற நாடுகளுக்கு அனுப்ப தடை: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து ஏற்றுமதி பொருட்கள் இந்தியாவின் நில சுங்க நிலையங்களை பயன்படுத்தி மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப வழங்கப்பட்ட அனுமதியை ஒன்றிய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு கொண்டு செல்ல இந்திய நில சுங்க நிலையங்களை பயன்படுத்த கடந்த 2020ல் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் பூடான், நேபாளம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு வங்கதேசத்தின் ஏற்றுமதி சீராக நடந்து வந்தது. இந்நிலையில், இந்திய நில சுங்க நிலையங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை ஒன்றிய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இது குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேற்று விடுத்த சுற்றறிக்கையில், ‘வங்கதேசத்தில் இருந்து ஏற்றுமதி சரக்குகளை கொண்டு வரும் கன்டெய்னர்கள், லாரிகள் போன்றவை இந்திய நில சுங்க நிலையங்களை பயன்படுத்தி பிற நாடுகளுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. இந்தியாவிற்குள் ஏற்கனவே நுழைந்த சரக்குகள் மட்டும் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.

பல உலக நாடுகளுக்கு அமெரிக்க பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் வங்கதேசத்தின் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதிகள் சிக்கலை சந்திக்கும் என கூறப்படுகிறது. ஜவுளித்துறையில் வங்கதேசம் இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளராக இருந்து வருகிறது. வங்கதேச உற்பத்தி பொருட்கள் இந்தியா வழியாக ஏற்றுமதி செய்யப்படுவதால் விமான நிலையத்தில் அதிகப்படியான சரக்கு போக்குவரத்து காரணமாக தாமதம் ஏற்படுவதாகவும், இந்த அனுமதியை ரத்து செய்யவும் இந்திய ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

தற்போது இந்த தடையின் மூலம் ஆடைகள், காலணிகள் மற்றும் ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற பல இந்திய ஏற்றுமதித் துறைகளுக்கு உதவும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்த போது வங்க கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் இருப்பதாக பேசியதைத் தொடர்ந்து இந்தியா இந்த நடவடிக்கை எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post வங்கதேசத்தில் இருந்து இந்தியா வழியாக சரக்குகளை பிற நாடுகளுக்கு அனுப்ப தடை: ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: