சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (07.04.2025) வினா – விடை நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தாமோதரன், இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம் ஆர். மூர்த்தி ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தாமோதரன் : பேரவைத் தலைவர் அவர்களே, கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், அருள்மிகு பொன்மலை வேலாயுதசாமி திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா?

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் கோரிய பொன்மலை வேலாயுதசாமி திருக்கோயிலானது 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அத்திருக்கோயிலை மைசூர் மகாராஜா குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கட்டியதாக தெரிய வருகிறது. புரவிபாளையம் ஜமின்தார் குடும்பத்தினர் பரம்பரை அறங்காவலர்களாக இருக்கிறார்கள். இந்த திருக்கோயிலின் திருப்பணிகள் ரூ.63 லட்சம் செலவில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. ஏற்கனவே திருக்கோயிலின் முன்மண்டபம் ரூ.45.10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அருமை அண்ணன் பொள்ளாச்சி ஜெயராமன் ஓயாமல் சரிந்துவிட்ட அந்த திருக்கோயில் உடைய சுற்றுச்சுவரை கட்ட வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கூட கொடுத்திருக்கின்றார். ரூ.2 கோடியே 31 லட்சம் செலவில் அந்த திருப்பணியும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது என்பதை இரண்டு உறுப்பினர்களுக்கும் சேர்த்து பேரவைத் தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தாமோதரன் : பேரவை தலைவர் அவர்களே, சுற்றுச்சுவர் வேலை முடிந்து விட்டது. இருந்தாலும் கூட சற்று குறுகலாக கட்டி விட்டார்கள். ஏற்கனவே இருந்த சுவர் இடிந்து விட்டதால் அந்த சுவரின் மீது வைத்துக் கட்டி இருந்தால் மிக அகலமாக இருந்திருக்கும். மலைக்கோயிலாக இருப்பதனால் மேற்பகுதிகள் சற்று அகலமாக இருந்தால்தான் அங்கே சென்று வர முடியும். ஆகவே விட்டுப்போன அந்த பணியையும், சுற்று சுவரையும் செய்து கொடுக்க வேண்டும். மேலும், கோபுர வேலையெல்லாம் பாக்கியிருக்கிறது. சுமார் ரூ.50 லட்சம் மேல் செலவாகும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் அந்த சுற்றுச்சுவருக்கும், கோபுர வேலைக்கும் நிதி ஒதுக்கி முழுமையாக அதை முடித்துக் கொடுக்க நம்முடைய அமைச்சர் முன் வருவாரா என்பதை தாங்கள் மூலமாக கேட்டுக்கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, முதல் கேள்விலேயே தெளிவாக பதிலை சொல்லி விட்டேன். ஏற்கனவே சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு 2000 சதுர அடிக்கு சுற்றுச்சுவர் இருக்கின்ற பகுதியில் தலம் சரிந்து விட்டது. அதை கட்டுவதற்கு தான் நம்முடைய உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும், நீங்களும் கேட்டிருந்தீர்கள். அதற்கு ரூ. 2 கோடி 31 லட்சத்திற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. கூடிய விரைவில் அந்த பணிகளும் மேற்கொள்ளப்படும். இத்திருக்கோயிலுக்கு ரூ. 63.50 லட்சம் மதிப்பீட்டில் 7 திருப்பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. அந்தப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று உறுப்பினர் அவர்களுக்கு ஏற்கனவே சொன்ன பதிலை திரும்பவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தாமோதரன் : பேரவை தலைவர் அவர்களே, பொள்ளாச்சி வட்டம், நல்லிக்கூடம்பாளையத்தில் மாரியம்மன் கோயில் இருக்கிறது. அதற்கு அறநிலையத்துறையின் அனுமதியோடு இப்போது குடமுழுக்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். அந்த கோயிலுக்கு எந்தவிதமான வருமானமும் கிடையாது. இதுவரை உபயதாரர்களை வைத்து கோயில் விழாக்கள் மற்றும் பூஜை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த கோயிலில் நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன. கோயிலுக்கு அருகிலேயே ஒரு நிலம் உள்ளது. அந்த நிலத்திலே ஒரு திருமண மண்டபம் கட்டிக் கொடுத்தால் அந்த கோயில் உடைய செலவுகளை எல்லாம் நாங்கள் சரி செய்து கொள்வோம். கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட தென்முத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மதுரைவீரன் கோயில் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய அரசு முன்வருமா என்பதை கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் கூறிய அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 24 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிறைவேற்றித் தரப்படும். அவர் கூறிய மற்றொரு கோயிலான அருள்மிகு மதுரைவீரன் கோயிலானது ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயிலாகும். கடந்த ஆட்சி காலத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி எண்ணிக்கை 1,000 திருக்கோயில் என்று இருந்ததை 1,250 திருக்கோயிலாக தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உயர்த்திருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்த நிதியை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தற்போது இரண்டரை லட்சம் ரூபாயாக உயர்த்தி இருக்கின்றார். உறுப்பினர் கோரிய அருள்மிகு மதுரைவீரன் கோயிலுக்கும் அந்த நிதி வழங்கப்பட்டு அதில் 70 சதவீத பணிகள் முடிவுற்றிருக்கின்றன. மீதமுள்ள 30 சதவீத பணிகள் ஒரு மாதத்திற்குள்ளாக முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணி செய்ய வேண்டி இருந்தால் அதற்கான பட்டியலை தாருங்கள். அதையும் இணைத்துக்கொண்டு திருப்பணி செய்து தருகிறோம். இதுவரை 5,000 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில்கள் மற்றும் 5,000 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலா ரூ. 106 கோடி வீதம் ரூ. 212 கோடியினை இந்த திராவிட மாடல் ஆட்சியில் வழங்கி இருக்கின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம் ஆர். மூர்த்தி : பேரவை தலைவர் அவர்களே, இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயிலானது டிவிஷன் 49, ஆதம்சாகிப் தெருவில் அமைந்துள்ளது. அக்கோயில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் குளம் மாத்திரம் பாழ்பட்டு நிற்கின்றது. அதனை அமைச்சர் சீர் செய்து செய்துதருவாரா என்று கேட்டு அமைகிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்: பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் கோரிய அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலின் திருக்குளத் திருப்பணி நிச்சயமாக நிறைவேற்றித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post சட்டப்பேரவையில் வினா – விடை நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: