நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஜனவரி மாதம் 31ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மார்ச் 10ம் தேதி இரண்டாவது அமர்வு தொடங்கி நடந்து வந்தது. நேற்று கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையில் நேற்று அதிகாலை நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி சோனியாகாந்தி பேசும்போது, வக்பு திருத்த மசோதாவை தூக்கியெறிய வேண்டும் என்று பேசினார்.

இதற்கு மக்களவையில் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்பிக்கள் முழக்கமிட்டனர். இது போல பேசுவது கண்டனத்துக்குரியது என்று கூறிய சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை ஒத்திவைத்தார். பின்னர் பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன், சபாநாயகர் ஓம் பிர்லா அறிக்கை வாசித்தார். இதில்,‘‘பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு திருத்த மசோதா உட்பட 10 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏப்ரல் 3ம் தேதி பூஜ்ஜிய நேரத்தில் குறைந்தது 202 உறுப்பினர்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எழுப்பினார்கள். இது இதுவரை எந்த மக்களவையிலும் பூஜ்ய நேரத்தில் எழுப்பப்பட்ட விஷயங்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். இது ஒரு சாதனையாகும் ” என்றார். இதேபோல் மாநிலங்களவையும் தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

The post நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: