பிம்ஸ்டெக் நாடுகளிலும் இந்தியாவின் யுபிஐ: 21 அம்ச செயல்திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிவு

பாங்காக்: இந்தியாவின் யுபிஐயை பிம்ஸ்டெக் நாடுகளின் கட்டண முறைகளுடன் இணைப்பது உள்ளிட்ட 21 அம்ச செயல்திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். தாய்லாந்தில் பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டமைப்பின் ஆறாவது மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுற்றுலா, விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிம்ஸ்டெக் நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் கடல்சார் போக்குவரத்து ஒப்பந்தம் கையெழுத்தானது. மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 21அம்ச செயல்திட்டத்தை முன்மொழிந்துள்ளார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘மார்ச் 28ம் தேதி தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பேரிடர் மேலாண்மை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கு இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான பிம்ஸ்டெக் சிறப்பு மையத்தை நிறுவ வேண்டும்.

பிம்ஸ்டெக் குழுமம் உலகளாவிய நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான மன்றமாகும். நாம் இதனை வலுப்படுத்துவதும் நமது ஈடுபாட்டை ஆழப்படுத்துவதும் கட்டாயமாகும். இந்த சூழலில் 21 அம்ச செயல்திட்டத்தை நான் முன்மொழிகிறேன். இந்த செயல் திட்டத்தில் மனிதவள உள்கட்டமைப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட மேம்பாட்டிற்கான போதி(BODHI) அல்லது பிம்ஸ்டெக் முயற்சியும் அடங்கும். இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிம்ஸ்டெக் நாடுகளை சேர்ந்த சுமார் 300 இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு பிம்ஸ்டெக் நாடுகளின் தேவைகளை புரிந்துகொள்வதற்கு முன்னோடி ஆய்வு அவசியமாகும். கூடுதலாக இந்தியாவின் யுபிஐ கட்டண முறையை பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் உள்ள கட்டண முறைகளுடன் இணைப்பதற்கு முன்மொழிகிறேன்.

வர்த்தகம், தொழில் மற்றும் சுற்றுலா என அனைத்து துறைகளிலும் பயனிப்பதாக இது இருக்கும். ஐடி துறையின் வளமான ஆற்றலை பயன்படுத்தி பிம்ஸ்டெக்கை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தலாம். பிம்ஸ்டெக் நாடுகள் முழுவதும் வணிகத்தை அதிகரிப்பதற்கு பிம்ஸ்டெக் வர்த்தக சபையை அமைப்பது, வருடாந்திர வணிக உச்சிமாநாடுகளை ஏற்பாடு செய்வது, பிராந்தியத்திற்குள் உள்ளூர் நாணயங்களின் வர்த்தகத்தை ஊக்குவிப்பது குறித்தும் ஆராயவேண்டும். இணைப்பு மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு இந்தியாவில் பிம்ஸ்டெக் பாரம்பரிய இசைவிழா நடத்தப்படும். இளைஞர் ஈடுபாட்டிற்காக பிம்ஸ்டெக் இளம் தலைவர்கள் உச்சிமாநாடு இந்த ஆண்டு நடைபெறும் மற்றும் பிம்ஸ்டெக் ஹேக்கத்தான் மற்றும் இளம் தொழில்துறை பார்வையாளர்கள் திட்டம் தொடங்கப்படும்.

இந்த ஆண்டு இந்தியாவில் பிம்ஸ்டெக் தடகளப்போட்டியை நடத்தவும், 2027ம் ஆண்டில் முதல் பிம்ஸ்டெக் விளையாட்டு போட்டிகளை நடத்தவும் முன்மொழிகிறேன்” என்று தெரிவித்தார். தாய்லாந்து பயணத்தின்போது பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் பியாடோங்டார்னுடன் சேர்ந்து வாட் போ எனப்படும் பிரபல புத்தர் கோயிலுக்கு சென்றார். இந்த கோயில் மிகப்பெரிய சாய்ந்த புத்தர் சிலைக்கு புகழ்பெற்றதாகும்.மேலும் பிரதமர் மோடி தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கேகோர்ன் மற்றும் ராணி சுதிடா உள்ளிட்டோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

 

The post பிம்ஸ்டெக் நாடுகளிலும் இந்தியாவின் யுபிஐ: 21 அம்ச செயல்திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிவு appeared first on Dinakaran.

Related Stories: