மீனம்பாக்கம்: துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில், ஓராண்டு தலைமறைவு குற்றவாளியான தஞ்சாவூரை சேர்ந்த வாலிபரை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயிலிருந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதில் சென்னைக்கு வந்த பயணிகளின் பயணிகளின் பாஸ்போர்ட் உள்பட பல்வேறு ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.
இதே விமானத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி உஸ்மான் (26) என்ற வாலிபரும் சென்னை வந்திருந்தார். அவரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கம்ப்யூட்டரில் அதிகாரிகள் பரிசோதித்தபோது, இவர் கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்ற தகவல்கள் தெரியவந்தது. அதன்படி, துபாயிலிருந்து சென்னை வந்த பயணி முகமது அலி உஸ்மான்மீது, கடந்த 2024ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் தஞ்சாவூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு குற்ற வழக்கு பதிவாகி உள்ளது. அவரை கைது செய்து விசாரிக்க போலீசார் தேடி வந்தனர். இச்சந்தர்ப்பத்தில் முகமது அலி உஸ்மான் போலீசில் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து, முகமது அலி உஸ்மானை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை எஸ்பி அறிவித்தார்.
அதோடு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர்மீது எல்ஓசி போடப்பட்டு உள்ளதாகவும் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த முகமது அலி உஸ்மானை வெளியே விடாமல், அலுவலக அறையில் குடியுரிமை அதிகாரிகள் அடைத்து வைத்தனர், இதுகுறித்து விமானநிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்து, அவருக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இதுபற்றி தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை எஸ்பிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானநிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள தலைமறைவு குற்றவாளி முகமது அலியை பிடித்து செல்ல, இன்று தஞ்சாவூர் தனிப்படை போலீசார் சென்னை விமானநிலையத்துக்கு வந்தனர். அங்கு போலீஸ் காவலில் இருந்த தலைமறைவு குற்றவாளி முகமது அலி உஸ்மானை தஞ்சை தனிப்படை போலீசார் கைது செய்து, காவலில் அடைப்பதற்காக தஞ்சாவூருக்கு வேனில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
The post சென்னை விமானநிலையத்தில் ஓராண்டு தலைமறைவு தஞ்சை குற்றவாளி கைது appeared first on Dinakaran.