*ராமேசுவரம் – தனுஷ்கோடி பாதையில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா இரண்டுக்கும் மத்தியிலுள்ள தீவில் கோதண்டராமரை தரிசிக்கலாம். பொதுவாக ராமரின் காலடியில் அனுமனிருப்பார்; இங்கு விபீஷணன் காணப்படுகிறார். இத்தல அனுமன் ‘பரிந்துரைத்த அனுமன்’ என போற்றப்படுகிறார். ராமரிடம், விபீஷணரை
ஏற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரை!
*ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வில்லேந்திய கோதண்ட ராமரை தரிசிக்கலாம். இத்தல சீதாபிராட்டியாருக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபமேற்றி 12 முறை வலம் வந்தால் மாங்கல்ய பாக்கியம் கிட்டுகிறது.
*விபாண்டக மகரிஷியின் பிரார்த்தனைக்கு இணங்கி தன் திருக்கல்யாணக் கோலத்தை ராமபிரான் காட்டியருளிய தலம் மதுராந்தகம். ராமானுஜர் தன் ஆச்சாரியரான பெரியநம்பிகளிடம் வைணவத்திற்குரிய பஞ்ச ஸம்ஸ்காரத்தைப் பெற்றதும் இங்குதான்.
*சேலம், அயோத்தியாபட்டணத்தில் கோதண்டபாணியாக ராமர் அருள்கிறார். கலை எழில் கொஞ்சும் சிற்பங்கள் நிறைந்த இத்திருக்கோயிலில் அயோத்தி செல்லும் முன், காலதாமதம் கருதி, ராமபிரான் தன் பட்டாபிஷேகத்தை இங்கே மேற்கொண்டார் என்றும், பிறகு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டார் என்பார்கள்.
*செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூருக்கு அருகில் பொன்பதர்கூடத்தில் சதுர்புஜகோதண்ட ராமர் தரிசனம் தருகிறார். திருமாலாகத் தனக்கு காட்சி தர வேண்டிய தேவராஜ மகரிஷிக்காக, நான்கு கரங்களுடன் சங்கு&சக்கரம் ஏந்தி, ராமர் காட்சி தந்த திருத்தலம் இது. இவரது திருமார்பில் மகாலக்ஷ்மி இடம் பெற்றிருப்பது சிறப்பான அம்சமாகும்.
*கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்தில் ராமாயண நிகழ்வுகள் முழுவதும் சித்திரமாக தீட்டப்பட்டிருக்கின்றன. அன்னையும் அண்ணலும் திருமணத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தலமிது. இத்தலத்தில் வீணை மீட்டும் கோலத்தில் அனுமனைத் தரிசிக்கலாம்.
*திருநின்றவூரில் ஏரிகாத்தராமரை தரிசிக்கலாம். பெரிய திருமேனி உடைய இந்த ராமரோடு சந்நதியின் வெளிப்புறத்தில் தன் தோள்களில் ராம லட்சுமணரை சுமந்த நிலையில் ராமபக்தரான அனுமனையும் தரிசிக்கலாம்.
*தஞ்சாவூர், திருப்புள்ளம்பூதங்குடியில் வல்வில் ராமன், சயனத்திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றிய தலமாக இது கருதப்படுகிறது.
*திருவண்ணாமலையை அடுத்த நெடுங்குன்றத்தில் ராமச்சந்திர பெருமாளை தரிசிக்கலாம். வில் அம்பு இல்லாத ராமன் இவர்! அனுமனுக்கு ராமபிரான் முக்திகோபநிஷத் எனும் உபநிஷத்தை உபதேசித்த தலம் இது. ராமநவமி வைபவத்தின் ஏழாம் நாள் தேரும், பத்தாம் நாள் இந்திரவிமானத் திருவிழாவும் இத்தல விசேஷம்.
*திருவாரூர், முடிகொண்டானில் கோதண்டராமர் அருள்கிறார். இங்கு, ராமர் தன்னை விட்டுவிட்டு விருந்து சாப்பிட்டதால் கோபம் கொண்டு ஆலயத்திற்கு வெளியே தனி சந்நதியில் தங்கிவிட்ட அனுமனை தரிசிக்கலாம். பரத்வாஜ முனிவர் ராமபிரானின் ஆராதனைக்காக பிரதிஷ்டை செய்த ரங்கநாதரும் இத்தலத்தில் அருள்கிறார்.
தொகுப்பு: கிருஷ்ணா
The post ஸ்ரீராம தரிசனம்! appeared first on Dinakaran.