புதுச்சேரி, ஏப். 4: இமெயில் மூலம் புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 3 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரி வழுதாவூர் சாலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் இந்து அறநிலையத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒரு இ-மெயில் வந்தது.
அந்த இ-மெயிலில் பிரபல யூடியூபர் மற்றும் சிறையில் உயிரிழந்த கைதியின் விசாரணை சரியாக நடைபெறவில்லை. இதனால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊழியர் ஒருவர் கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வடக்கு எஸ்.பி. வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்தனர்.
உடனே மோப்ப நாய்கள் ராம், டானி மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டு நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு, பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், ராஜீவ்காந்தி சிலை முதல் வி.பி.ஐ நகர் ஆர்ச் வரை வழுதாவூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்ததில் எந்தவித வெடிகுண்டும் இல்லையென தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதன்பிறகே போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்தனர்.இச்சம்பவம் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த மெயில், முப்பலா லட்சுணமராவ் என்ற பெயரில் வந்துள்ளது. இந்த மெயில் ஐடியை ஆராய்ந்ததில் டார்க்நெட்டில் இருந்து அனுப்பி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் யார் அதை அனுப்பினார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சீனியர் எஸ்.பி. கலைவாணனிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர ேசாதனை செய்ததில், எந்தவொரு வெடிகுண்டும் இல்லை, வெறும் புரளி என தெரியவந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post இ-மெயில் மூலம் வந்தது புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் 3 மணி நேரம் சோதனை appeared first on Dinakaran.