புதுச்சேரி-கடலூர் எல்லையில் தீவிர சோதனை

கடலூர், ஜன. 1:கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பை முன்னிட்டு எஸ்.பி. மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கோடீஸ்வரன், ரகுபதி ஆகியோர் தலைமையில் 10 டிஎஸ்பி, 48 இன்ஸ்பெக்டர்கள், 230 எஸ்ஐ, எஸ்எஸ்ஐ மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுவை மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு, மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கூடுதலாக கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஆல்பேட்டை சோதனை சாவடியில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்து, போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் போலீசார் உடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டார். புதுச்சேரியில் இருந்து வந்த பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தவர்களை பிடித்து அவர்களிடமிருந்து மதுபானங்களை பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தனர். அப்பொழுது ஷேர் ஆட்டோவில் வந்த ஒரு நபர் தனது கைலியில், புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, இன்று முதல் குடித்துவிட்டு கோவிலுக்கு கயிறு கட்ட இருப்பதாகவும், அதனால் சாராய பாக்கெட்டுகளை வீட்டிற்கு வாங்கி செல்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் கடுமையாக எச்சரித்து அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர். அப்போது டிஎஸ்பிக்கள் தமிழினியன், சார்லஸ், இன்ஸ்பெக்டர் பாலாஜி உள்பட போலீசார் பலர் சோதனையில் ஈடுபட்டனர்.

 

Related Stories: