கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?

 

சென்னை: கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக 19ம் தேதி விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கடந்த 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

இதேபோல், கரூர் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்டோரும் சிபிஐ விசாரணைக்காக டெல்லியில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஜனவரி 12ம் தேதி ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ கடந்த வாரம் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி, நேற்று காலை விசாரணைக்கு ஆஜராக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், சுமார் 11 மணி அளவில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். 41 பேர் பலியான வழக்கில் தவெக தலைவர் விஜயிடம் நேற்று சுமார் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 19ம் தேதி விஜயை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது. இதனிடையே டெல்லியில் இருந்து சற்றுநேரத்தில் விஜய் சென்னைக்கு புறப்படுகிறார்.

Related Stories: