திருப்பூர், ஏப். 3: முக்கனிகளில் சிறந்ததும், சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணக்கூடியது மாம்பழம். வருடம் முழுவதும் கிடைத்தாலும் கூட கோடை காலத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை மாம்பழ சீசன் இருக்கும்.
இந்த காலகட்டத்தின் போது மாம்பழங்களின் வரத்து அதிக அளவு இருக்கும். வரத்து அதிகமாகும் போது விலை குறைவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவது வழக்கம். தற்போது ஏப்ரல் மாதம் துவங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழம் விற்பனைக்காக திருப்பூர் கொண்டுவரப்படுகிறது. திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் அருகே ஏராளமான தள்ளு வண்டிகளிலும், ஆட்டோக்களிலும் தற்போது முதலே மாம்பழம் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.
தற்போது பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செந்தூரம் வகை மாம்பழம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவு மாம்பழங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாம்பழ வியாபாரி கூறுகையில், ‘‘தற்போது தான் சீசன் தொடங்கியுள்ளதால் ஓரளவு வரத்து வந்து கொண்டிருப்பதாகவும், ஓரிரு வாரத்தில் வரத்து அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது வரத்து துவங்கப்பட்டிருப்பதன் காரணமாக விலை சற்று அதிகமாக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இனிவரும் காலங்களில் விலை குறையக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர். இதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாங்காய்கள் சந்தைகளில் கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
The post மாம்பழ சீசன் தொடங்கியது; கிலோ ரூ.200க்கு விற்பனை appeared first on Dinakaran.