சேரம்பாடி பகுதியில் ஜேசிபி வைத்து மண் திட்டு குடைவதாக மக்கள் புகார் : தாசில்தார் நேரில் ஆய்வு – பரபரப்பு

 

பந்தலூர், ஏப்.11: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் ஜேசிபி பயன்படுத்தி மலைப்பாங்கான இடத்தை குடைவதாக எழுந்த புகாரின் பேரில் பந்தலூர் தாசில்தார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரம்பாடி அருகே மலைப்பாங்கான இடத்தை ஜேசிபி வைத்து குடைந்து மண் எடுத்து வேறு இடத்திற்கு லாரி மூலம் கொண்டு செல்வதாக புகார் எழுந்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு பந்தலூர் தாசில்தார் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், சாதாரண பொது மக்கள் தங்களுடைய நிலத்தை சமன்படுத்துவதற்கு ஜேசிபி வாகனத்தை பயன்படுத்தினால் பறிமுதல் செய்வதும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேரம்பாடி பகுதியில் மலைப்பாங்கான இடத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து குடைவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பந்தலூர் தாசில்தார் ஷிராஜி நிசா கூறுகையில், ‘‘பொதுமக்கள் புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தேன். ஜேசிபி இயந்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்று பட்டா நிலத்தில் நிலம் சமன்படுத்தி வருகின்றனர். மேலும் வெட்டிய மண்ணை கொட்டும் இடத்தில் நீர்நிலைகள் இருப்பதாக வருவாய்த்துறை ஆவணங்களில் இல்லை. இதில் விதி மீறல் இருப்பதாக தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளேன்’’ என தெரிவித்தார்.

The post சேரம்பாடி பகுதியில் ஜேசிபி வைத்து மண் திட்டு குடைவதாக மக்கள் புகார் : தாசில்தார் நேரில் ஆய்வு – பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: