தமிழகம், புதுச்சேரியில் லாரி டிரைவர்களை வெட்டி அட்டூழியம்; கடலூரில் வழிப்பறி கொள்ளை கும்பல் தலைவன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில், லாரி டிரைவர்கள் மற்றும் விவசாயியை தாக்கி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுகொன்றனர். விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் நேற்று அதிகாலை லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஓதவந்தான்குடியைச் சேர்ந்த டிரைவர் பிரபு (43), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆவஞ்சேரியைச் சேர்ந்த டிரைவர் மணிமாறன் (35) மற்றும் கடலூர் அருகே உள்ள எம்.புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளிமுத்து (45) ஆகியோரிடம் 2 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் கத்தியாக் தாக்கி ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும் ஒரு லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய நிலையில், சக டிரைவர்கள் திரண்டதால் அந்த கும்பல் தப்பித்துவிட்டது. கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த பிரபு, மணிமாறன், காளிமுத்து ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது கடலூர் அருகே உள்ள எம்.புதூர் காச நோய் மருத்துவமனை அருகே ஒரு முந்திரி காட்டில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், இருசக்கர வாகனம் நின்றதை கண்டு அதன் அருகில் சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு வாலிபர் திடீரென கத்தியுடன் வந்து திருப்பாதிரிப்புலியூர் தலைமை காவலர் கோபி என்பவரை கையில் வெட்டியுள்ளார். இதை தடுக்க சென்ற கணபதி என்ற காவலரையும் அவர் வெட்டினார். இதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் அந்த வாலிபரிடம் சரண் அடையுமாறு கூறினார். ஆனால் இதை கேட்காத அந்த வாலிபர் இன்ஸ்பெக்டர் சந்திரனையும் கத்தியால் வெட்ட முயன்றார். உடனே தற்காப்புக்காக வேறு வழியின்றி இன்ஸ்பெக்டர் சந்திரன் தனது கை துப்பாக்கியால் 3 முறை அந்த வாலிபரை நோக்கி சுட்டார். இதில் இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவர்களின் ஜீப்பிலேயே அந்த வாலிபரை ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து ெசன்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ைள கும்பல் தலைவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் புதுச்சேரி மாநிலம் திலாசுப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபி மகன் விஜய் என்கிற மொட்டை விஜய் (19) என்பதும், இவன்தான் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது. இவன் மீது கடலூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 5 வழக்குகளும், புதுச்சேரியில் 22 வழக்குகளும் என மொத்தம் 30 வழக்குகள் உள்ளது.

The post தமிழகம், புதுச்சேரியில் லாரி டிரைவர்களை வெட்டி அட்டூழியம்; கடலூரில் வழிப்பறி கொள்ளை கும்பல் தலைவன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: