பிரபசிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா அதிரடி; லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி: 3 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்

லக்னோ: ஐபிஎல் 18வது தொடரின் 13வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோவின் அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் மிட்செல் மார்ஷ் ரன் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அதையடுத்து, அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார்.

இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில், 4வது ஓவரில் லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் மார்க்ரம் (28 ரன்) கிளீன் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் கிளென் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் சஹலிடம் கேட்ச் தந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய பூரன் 44 ரன்னில் யஷ்வேந்திர சஹல் பந்தில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின்னர் டேவிட் மில்லர் களமிறங்கினார்.

அடுத்த வந்த மில்லர் 19 ரன்னில் வெளியேற, 6வது விக்கெட்டுக்கு இணை சேர்ந்த படோனியும், அப்துல் சமதும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த இணை, 21 பந்துகளில் 47 ரன்களை விளாசி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் ஆயுஷ் படோனி (41 ரன்), அப்துல் சமத் (27 ரன்) அடுத்தடுத்து அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. ஷர்துல் தாக்குர் 3, ஆவேஷ் கான் 0 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் தரப்பில், அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட், பெர்குசன், மேக்ஸ்வெல், சஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. துவக்க வீரர் பிரியனாஷ் ஆர்யா, பிரபசிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியனாஷ் ஆர்யா 8 ரன்னில் வெளியேறினார்.

அடுத்த வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பிரபசிமரன் சிங்குடன் ஜோடி சேர்ந்து லக்னோ பந்துவீச்சாளர்களை பந்தாடினர். சிறப்பாக ஆடிய பிரபசிம்ரன் சிங் 69 ரன்னில் (34 பந்து, 3 சிக்சர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த நேஹல் வதேராவும் அதிரடி காட்ட பஞ்சாப் அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழந்து 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன் (30 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி), நேஹல் வதேரா 43 ரன் (25 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post பிரபசிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா அதிரடி; லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி: 3 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் appeared first on Dinakaran.

Related Stories: