உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; இரண்டு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் நடைபெற்றுள்ளது: துணை முதல்வர் பதில்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து சில குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

இதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத, அவசியத் தேவைகளை அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின்பேரில் நிறைவேற்றுவதற்காக, ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். இதுகுறித்து, 10 கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பிவைக்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக 2 ஆயிரத்து 437 பணிகளுக்கான முன்மொழிவுகள் அரசுக்கு வரப்பெற்றன. அவை துறைவாரியாக உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு, பரிசீலிக்கப்பட்டன. 2023-24ம் நிதியாண்டில் 784 பணிகள் கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 367 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

2024-25ம் நிதியாண்டில், 469 பணிகள், 3 ஆயிரத்து 503 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 65 பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக மொத்தம் இந்த திட்டத்தின்கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,253 பணிகள், 14 ஆயிரத்து 466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளில் நடைமுறையில் உள்ள திட்டங்களின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவருடைய எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரையில், அவர் சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில், 4 பணிகள் செயல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன; அதில் 3 பணிகள் நிறைவேற்றப்பட்டு, ஒரு பணி தற்போது நடைபெற்று வருகிறது. அவர் கொடுத்துள்ள கோரிக்கைகளில், மீதமுள்ள 6 பணிகளைப் பொறுத்தவரையில், ஒரு பணி துறையின் பரிசீலனையில் தற்போது உள்ளது. இதர 5 பணிகள் சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்டு, அவற்றிற்கு பதிலாக மாற்றுப் பணிகளைக் குறிப்பிட்டு வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகக் கேட்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றுப் பணிகளை பரிசீலனை செய்து நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். முதல்வர் இந்தத் திட்டத்தை அறிவிக்கும் போது குறிப்பிட்டவாறு, எந்தவிதமான கட்சிப் பாகுபாடின்றி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

The post உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; இரண்டு ஆண்டுகளில் 1,253 பணிகள் ரூ.14,466 கோடியில் நடைபெற்றுள்ளது: துணை முதல்வர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: