* சென்னையில் இருந்தபடி திருநெல்வேலியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்
சென்னை: நடிகர் கருணாஸ் கட்சியின் வழக்கறிஞரை கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில், அவரது கார் டிரைவரான கூலிப்படை தலைவன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ரவி ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். விசாரணையில் சென்னையில் இருந்தப்படி திருநெல்வேலியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதும், பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு மற்றும் தனது அரசியல் கட்சி பிரமுகரை தரைக்குறைவாக பேசியதால் கொன்றதாக ரவுடி கார்த்திக் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியில் தனது மனைவி சரளாவுடன் வசித்து வந்தவர் வெங்கடேசன்(38). வழக்கறிஞரான இவர், தொழில் தொடர்பாக விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள பவுல்ராஜ் குடியிருப்பில், தனது நண்பர் சேதுபதி என்பவருடன் இணைந்து கடந்த 4 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
வழக்கறிஞர் வெங்கடேசன், நடிகர் கருணாஸ் நடத்தும் முக்குலத்தோர் புலிப்படையின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக வெங்கடேசன் தங்கியிருந்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் சந்தேகமடைந்து நேற்று முன்தினம் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வழக்கறிஞர் அழுகிய நிலையில் வெட்டு காயங்கள் இறந்து கிடந்தார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் வழக்கறிஞர் வெங்கடேஷனிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்த திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகில் உள்ள மருகால்குறிச்சியைச் சேர்ந்த கொலை உள்ளிட்ட 27 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கூலிப்படை தலைவன் கார்த்திக் இந்த கொலையை தனது நண்பர் ரவியுடன் இணைந்து செய்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று நாங்குனேரியில் கூலிப்படை தலைவன் கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரவியை கைது செய்தனர். பின்னர் தனிப்படையினர் இரண்டு பேரையும் சென்னைக்கு இன்று அதிகாலை அழைத்த வந்தனர். பிறகு கொலை தொடர்பாக கூலிப்படை தலைவன் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: வழக்கறிஞர் வெங்கடேஷன் கொலையில் கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் கார்த்திக் திருநெல்வேலி மாவட்ட போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தனது பாதுகாப்புக்காக அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் பரிந்துரைப்படியே வழக்கறிஞர் வெங்கடேசன் தனது கார் டிரைவராக பணியில் சேர்த்துள்ளார். ஆனால் கார்த்திக் கார் டிரைவர் போல் இல்லாமல் தான் பெரிய ரவுடி என்ற நினைப்பிலேயே அடிக்கடி வெங்கடேஷனிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கூலிப்படை தலைவன் கார்த்திக் சென்னையில் கார் ஓட்டினாலும், தனது அதிகாரத்தை திருநெல்வேலியில் யாருக்கும் விட்டுகொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆப் மூலம் திருநெல்வேலியில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்து, கூலிக்கு ஆட்களை அனுப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இது வழக்கறிஞர் வெங்கடேசனுக்கு பிடிக்கவில்லை. கார்த்திக்கிடம் ‘நீ ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் எனக்கு தான் கேட்டப்பெயர் ஏற்படும்’ என்று அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். அப்போது கார்த்திக் ‘நான் உனக்கு கார் ஓட்ட வரவில்லை. எனது பாதுகாப்புக்காக எனது அரசியல் தலைவர் கூறியதால் தான் நான் உனக்கு கார் ஓட்டுகிறேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். ரவுடி கார்த்திக் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பிரமுகருக்கு மிகவும் விஸ்வாசமாக இருந்து வருகிறார்.
அந்த அரசியல் கட்சி பிரமுகர் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டத்திற்கு வந்தால், ரவுடி கார்த்திக் தான் அவருக்கு கார் ஓட்டுவார். அந்த அளவுக்கு நெருக்கமானவர். அதேநேரம் ரவுடி கார்த்திக்கை பல்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் இருக்கும் போது கூட அந்த அரசியல் பிரமுகர் தான் தனது ஆதரவாளர்கள் உதவியுடன் ஜாமீனில் வெளியே எடுப்பாராம். இந்த நிலையில் தான் திருநெல்வேலியில் அண்மையில் நடந்த கொலை ஒன்றில் ரவுடி கார்த்திக் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் எதிர் தரப்பு ரவுடி கும்பல் ரவுடி கார்த்திக்கை எப்ப வேண்டும் என்றாலும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த எதிர் கும்பலுக்கு வழக்கறிஞர் வெங்கடேஷன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் நேரடியாக வழக்கறிஞர் வெங்கடேசனை ரவுடி கார்த்திக் கடந்த 2 வாரங்களாக எதிர்த்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரவுடி கார்த்திக் வழக்கறிஞர் வெங்கடேஷனுடன் மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திருநெல்வேலியில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக பிரச்னை எழுந்தது. அப்போது வெங்கடேஷன் ரவுடி கார்த்திக்கிடம், ‘அண்ணன் மட்டும் உனக்கு உதவி செய்யவில்லை என்றால், உன்னை எப்போவே போட்டு தள்ளி இருப்பானுங்க என்று கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு ரவுடி கார்த்திக் ‘அப்போ என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ள எதிர் கோஷ்டிகளுக்கு நீ தான் உளவு கொடுக்கிறீயா என்று கேட்டதாக கூறப்படுகிறது. இருவரும் மது போதையில் இருந்தால், ஒருவரை ஒருவர் ஒருமையில் மிகவும் ஆபாசமாக பேசியுள்ளனர். அப்போது வழக்கறிஞர் வெங்கடேஷ் ரவுடி கார்த்திக் மிகவும் மதிக்கும் அரசியல் பிரமுகரை ‘மாமா வேலை பார்க்கும் பையன் என்று சொல்வாயா என கூறி தாக்கியுள்ளார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் கையில் வைத்திருந்த கத்தியால் வெங்கடேஷனை தலையில் வெட்டியும், முகத்தில் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார். அதன் பிறகு ரவுடி கார்த்திக் சட்டை முழுவதும் ரத்தக்கறையானது. உடனே அறையில் இருந்த மற்றொரு சட்டையை எடுத்து போட்டுகொண்டு ஒன்றும் தெரியாதப்படி அங்கிருந்து தனது நண்பர் ரவி உதவியுடன் நாங்குனேரிக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இவ்வாறு விசாரணையின் போது கூலிப்படை தலைவன் கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
The post நடிகர் கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொலை செய்தது குறித்து கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் கார்த்திக் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.