திருவாடானை, மார்ச் 30:திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் வழியாக திருச்சி – ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை உள்ளது. இந்த புறவழிச்சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தின் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில், கடந்த சில ஆண்டுகளாக வாகனப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் 50 அடி தூரம் இடைவெளியில் உள்ள இரு இடங்களில் சாலையின் நடுவே போடப்பட்ட தார்ச்சாலை பெயர்ந்து 2 அடி கீழே இறங்கியதால், அதில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டது. அதில் இரவு நேரங்களில் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், விழுந்து விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் எழுந்து செல்லும் சூழல் நிலவுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
சர்வீஸ் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள இரு மெகா சைஸ் பள்ளங்களை உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த பிப்.10ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் சர்வீஸ் சாலையின் நடுவே இரு இடங்களில் ஏற்பட்ட மெகா சைஸ் பள்ளங்களை மூடி சீரமைத்து விட்டனர்.
The post சாலை பள்ளம் சீரமைப்பு appeared first on Dinakaran.