ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக 1.15கோடி ஊழியர்கள் பயன் அடைவார்கள். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 55 சதவீதமாக இருக்கும். கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்பட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை மூலமாக மொத்தம் 1.15கோடி ஒன்றிய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். 48.66 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் 66.55லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியிருப்பதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,614.04 கோடி செலவாகும்.

இதேபோல் பீகாரின் கோசி-மெக்சி நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமரின் கிரிஷி சின்சாய் யோஜனா துரிதப்படுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்தின் கீழ் சேர்ப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.6,282 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசு ரூ.3652 கோடியை பீகாருக்கு வழங்கும். 2029ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த திட்டத்தை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மண் ஊட்டசத்துக்களை நியாயமான விலையில் வழங்குவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 2025ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு ஊட்டச்சத்து அடிப்படையில் மானிய விகிதங்களை நிர்ணயிக்கும் திட்டத்துக்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 2024ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு( ஏப்ரல் 1 ,2025 முதல் செப்டம்பர் 30,2025) பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியமாக வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

* எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாக தயாரிப்புக்கு ரூ.22,919 கோடி
எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யவும், இதற்காக பெரிய முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ரூ.22,919 கோடி திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏனெனில் எலக்ட்ரானிக் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி 2014-15 நிதியாண்டில் ரூ.1.90 லட்சம் கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ.9.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டம் 91,600 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும் சுமார் ரூ.59,350 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

* ஹெலிகாப்டர் வாங்க ரூ.62 ஆயிரம் கோடி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அட்டாக் ஹெலிகாப்டர் வாங்க ரூ.62,000 கோடி ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. மொத்தம் 156 இலகுரக ஹெலிகாப்டர்கள் கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் தும்கூரில் உள்ள ஆலைகளில் தயார் செய்யப்படும்.

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: