சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,084 பேர் தேர்வெழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை 4,46,471 மாணவர்கள், 4,40,499 மாணவிகள் எழுதுகின்றனர். 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு முறைகேடுகளை தடுக்க 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்து வரும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு திட்டமிட்டபடி இன்று தொடங்கியது.
இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4,46,411 பேர் மாணவர்கள். 4,40,465 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 25,888 பேரும், சிறைவாசிகள் 272 பேரும் இந்ததேர்வில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்காக 4113 தேர்வு மையங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அமைத்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வை கண்காணிக்க 4858 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு அறைகளை கண்காணிக்க 48,426 பேர் கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 15,729 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு மொழிப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 9498383075, 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் ஐயங்களை தெரிவித்து பயன் பெறலாம். இதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.