10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 28.03.2025 ( 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. இப்பொதுத்தேர்விற்கான செய்முறைத் தேர்வுகள் 22.02.2025 முதல் 28.02.2025 வரை நடைபெற்று முடிந்துள்ளது. பொதுத்தேர்வுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று, தேர்விற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும். தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும் தேர்வுமையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தேர்வுப்பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலை அலுவலர்கள்/ஆசிரியர்கள்/ பணியாளர்களுக்கு அறிவுரைக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 12,487 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 446471 மற்றும் மாணவிகள் 440499 என மொத்தம் 8,86,970 தேர்வர்களும், தனித்தேர்வர்கள் 25,841 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 273 என மொத்தம் 9,13,084 தேர்வர்கள் 4113 தேர்வுமையங்களில் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 48,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு. சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
9498383075 / 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெறலாம். இதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

அலைபேசி தடை:-

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுங்கீனச் செயல்பாடுகள்:-

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் /முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Related Stories: