வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்புக்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை : வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்புக்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதும் ஆர்ப்பாட்ட அழைப்பு மடல்.

“தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் வழங்கிய ஆட்சியை அனைவருக்கும் பலனளிக்கும் சாதனைத் திட்டங்களுடன் நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினேன்.

தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கையாக விளங்கும் பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய – முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 12-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. உங்களில் ஒருவனான நான் திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியதுடன், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை – எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பா.ஜ.க. ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன். அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடன் கடந்த ஜனவரி 27-ஆம் நாள் டெல்லியில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்கள். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது. எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை – எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் எடுத்துரைத்தார். மாநிலங்களவையிலும் திருச்சி சிவா எம்.பி. இது குறித்துப் பேசினார். இரு அவைகளிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இது குறித்து வலியுறுத்தியும், நிலுவைத் தொகையை வழங்குவதற்குப் பதில், “உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது” என்று திசைதிருப்பும் பதில்களே ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து கிடைத்தது.

மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் – பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.

வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்புக்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் appeared first on Dinakaran.

Related Stories: