ஊத்துக்கோட்டை, டிச. 30: பெரியபாளையம் முதல் புதுவாயல் கூட்டுச்சாலை வரை 6 இடங்களில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் ஒரு வருடமாக எரியாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியில் அஞ்சாத்தம்மன் கோயில் கூட்டு சாலை பகுதியில் நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்திற்கு புதுப்பாளையம், மங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ, மாணவிகள் என 100 மேற்பட்டோர் வந்து சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு வேலை மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்காக வந்து செல்வது வழக்கம்.
மேலும், இந்த பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பேருந்து நிறுத்தம் அருகே உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த உயர்கோபுர மின் விளக்கு போடப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. அப்படி போடப்பட்ட நாளிலிருந்தே இதுவரை பயன் பாடில்லாமலே உள்ளது. மின் விளக்கின் கீழ் புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும், புதுப்பாளையம் உயர்மட்ட பாலம் பணி முடிவடைந்து விட்டதால் இனி மக்கள் நடமாட்டம் காணப்படும். எனவே, உயர்கோபுர விளக்கை சீரமைக்கை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல், ஆரணி பகுதியில் 1, ஆரணி காய்கறி சந்தை 1, வடக்கு நல்லூர் 1, கொள்ளூமேடு 1 என மொத்தம் 6 இடங்களில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் வைக்கப்பட்ட 6 உயர்கோபுர மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எரியாமல் உள்ள இந்த 6 மின் விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெரியபாளையம் முதல் புதுவாயல் கூட்டுச்சாலை வரை முக்கிய இடங்களிலும், விபத்து ஏற்படும் பகுதிகளிலும் உயர் கோபுர மின் விளக்குகள் வைக்கப்பட்டது. ஆனால், இதை பராமரிப்பது சம்மந்தப்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் பொறுப்பாகும். அவர்கள் தான் அதை பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
