போரூர், டிச.25: சரக்கு வேன் மீது பைக் மோதியதில் சாப்ட்வேர் இன்ஜினியர் பரிதாபமாக பலியானார். திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(34). இவர், துரைப்பாக்கத்தில் உள்ள, தொழில்நுட்ப பூங்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்கு பைக்கில் சென்றார். ரேடியல் சாலை வழியாக பல்லாவரம் நோக்கி சென்றபோது, முன்னால் சென்ற சரக்கு வேன் மீது மோதினார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பாலாஜி படுகாயமடைந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பாலாஜியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பரிவு போலீசார், இறந்த பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து சரக்கு வேன் டிரைவர் ரூபன்(33) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
